Prithviraj Sukumaran: சிக்கலில் பிரித்விராஜ்.. சம்பள விவரம் தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ்!
Prithviraj Sukumaran Tax Notice : தென்னிந்தியப் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வருபவர் பிருத்விராஜ் சுகுமாரன். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் எல்2 எம்புரான். இந்த படமானது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

பிருத்விராஜ் சுகுமாரன்
மலையாளத்தில் பிரபல நடிகர் மோகன் லாலின் (Mohanlal) முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் எல்2 எம்புரான் (L2 Empuraan) . இந்த படத்தை பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) இயக்கியிருந்தார். இந்த படமானது இவரின் இயக்கத்தில் வெளியாகும் 2வது திரைப்படமாகும். இந்த படத்தின் கதைக்களமானது முற்றிலும் அரசியல் மற்றும் மக்களின் பிரச்சனைகள் குறித்து வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் சில காட்சிகள் மக்களை உணர்வுகளை பாதித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் குஜராத்தில் (Gujarat) கடந்த 2001ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து இப்படத்தில் கூறப்பட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்புகள் எழுந்ததால் அந்த காட்சிகளும் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு அரசியல்வாதிகள் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பல எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாரனின் வீட்டிற்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. எதற்காக என்றால், இவர் நடித்த மூன்று படங்களின் சம்பளம் குறித்த தகவல்களை தருமாறு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமான வரித்துறை நோட்டீஸ்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் நடிப்பில் வெளியான கொடுவா, ஜனகனமன மற்றும் கோல்ட் போன்ற படங்களில் அவர் வாங்கிய சம்பளம் குறித்து தகவலை வழங்கும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இந்த மூன்று படங்களில் நடிப்பதற்கு எந்த வித சம்பளங்களையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இப்படங்களில் அவர் இணை தயாரிப்பாளராகப் படங்களை தயாரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும் இணை தயாரிப்பாளராக இவர், சுமார் 40 கோடி ரூபாய் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த பணமானது எந்தப் பெயரில் பெறப்பட்ட பணம் குறித்து வருமான வரித் துறை விளக்கம் கோரியுள்ளது. இது ஒரு வழக்கமான நடைமுறை என்று வருமான வரித் துறை விளக்கியுள்ளது.
பிரபல தொழிலதிபர் கோகுலம் கோபாலன் வீட்டில் சோதனை :
கடந்த 2025, மார்ச் 29 ஆம் தேதியில், பிருத்விராஜுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாதம் 29 ஆம் தேதிக்குள் நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரபல தொழிலதிபர் கோகுலம் கோபாலனின் சென்னை அலுவலகம் மற்றும் நீலாங்கரை இல்லத்தில் அமலாக்கத்துறை நேற்று, 2025, ஏப்ரல் 4ம் தேதியில் சோதனை நடத்தியது.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 மணி நேர ஆய்வு நள்ளிரவில் நிறைவடைந்தது. பின்னர், நேற்று கோழிக்கோட்டில் இருந்த கோபாலன், மாலையில் சென்னைக்கு அழைக்கப்பட்டு, இரவு வெகுநேரம் வரை விசாரிக்கப்பட்டார். பின் சோதனை முடிந்ததும், ஆவணங்கள் மற்றும் ரூ. 1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விரிவான ஆய்வுக்குப் பிறகு நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் மீண்டும் விசாரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.