‘அவர் ஜீனியஸ் இல்லையா?’ – எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து பேசிய இளையராஜா!

Ilaiyaraaja about M.S.Viswanathan: எம்.எஸ்.விஸ்வநாதனிடம் மொசார்ட்டின் தாக்கம் உண்டு. மேதைகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என சொல்வார்கள். அவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர், இவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?. இவர் போட்டது சினிமா இசை. தனிப்பட்ட இசை ஆல்பத்துக்காக பண்ணப்பட்ட இசை இல்லை.

அவர் ஜீனியஸ் இல்லையா? - எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து பேசிய இளையராஜா!

எம்.எஸ்.விஸ்வநாதன் - இளையராஜா

Published: 

08 Apr 2025 15:30 PM

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் எம்.எஸ்.விஸ்வநாதன் (M.S.Viswanathan) – இளையராஜா (Ilaiyaraaja) – ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman) ஆகியோர் ஏற்படுத்திய தாக்கம் அளப்பறியது. எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்தில் இருந்தபோது, இளையராஜாவும், இளையராஜா உச்சத்தில் இருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானும் அறிமுகமாகி அவர்களிடம் இருந்து  முற்றிலும் மாறுபட்ட இசையை வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர். மூன்று பேர் இசையை ரசிகர்கள் ஒப்பிட்டு யார் சிறந்தவர் என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. ஆனால் 3 பேரும் ஒருவருக்கொருவர் மற்றொருவரின் இசை குறித்து புகழ்ந்து பேசியிருக்கின்றனர். எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் பல படங்களில் இணைந்து இசையமைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் பாடியிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் இளையராஜாவிடம் கீபோர்ட் பிளேயராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றியிருக்கிறார்.

பல தருணங்களில் ஒவ்வொருவரது இசையின் சிறப்புகளை மற்றொருவர் பகிர்ந்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது இசையமைப்பாளர் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, ”அவருக்கு எத்தனை விழாக்கள் நடந்தாலும் இதுபோன்ற ஒரு விழா நடக்காது. உலகத்தில் எல்லா மொட்டுக்களும் மலர்வதில்லை. எல்லா மலர்களும் காய்ப்பதில்லை. எல்லா காய்களும் கனியாவதில்லை. ஆஸ்கருக்கு போன படங்கள் எல்லா படங்களுமா வெற்றிபெற்றது? அங்கு போட்டிக்கு போன படங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை” என அவரை புகழ்ந்து பேசினார்.

‘ராஜா சாருக்கு கிடைக்கும் மரியாதை ஆஸ்கரை விட பெரியது’ – ரஹ்மான்!

பின்னர் அவரைத் தொடர்ந்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்,  ”இங்கே ராஜா சார் இருக்கிறார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார் இருக்கிறார். அவர்களுக்கு எல்லாம் மக்களின் அன்பு நிறைய கிடைத்திருக்கிறது. ராஜா சார் எழுந்தவுடன் இந்த அரங்கில் எழுந்த கரகோஷம், நீங்கள் அவர் இசை மீது வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது. அது ஆஸ்கரை விட பெரிய மரியாதை” என்று பேசினார்.

இசைத்துறைக்கு இளையராஜா கொண்டு வந்த மரியாதை!

பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் இளையராஜா குறித்து தொகுப்பாளர் கோபிநாத் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ”எல்லோரும் அந்த காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார்கள். இசைக் கூடத்தில் இருந்து கிளம்பும்போது குடித்துவிட்டு தான் கிளம்புவார்கள். ஆனால் அந்த வழக்கத்தை இளையராஜா மாற்றினார். அவர் இசையை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் இசைத்துறை மீது ஒரு மரியாதையை அவர் கொண்டு வந்தார். அவரிடம் பணியாற்றினால் ஒரு மரியாதை இருக்கும். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அது தான்” என்று பேசினார்.

எம்.எஸ்.விஸ்வநாதனை புகழ்ந்து பேசிய இளையராஜா

 

இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு இசைஞானி இளையராஜா பேட்டியளித்திருந்தார். அப்போது  அவர், எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து பேசியதாவது, “எம்.எஸ்.விஸ்வநாதனிடம் மொசார்ட்டின் தாக்கம் உண்டு. மேதைகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என சொல்வார்கள். அவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர், இவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?. இவர் போட்டது சினிமா இசை. தனிப்பட்ட இசை ஆல்பத்துக்காக பண்ணப்பட்ட இசை இல்லை. ஆனால் அப்படி தனி இசைக்காக பண்ண தாக்கம் அவரது சினிமா இசையில் வந்திருக்கிறது. அப்போ அவர் ஜீனியஸ் இல்லையா?” என பேசியிருந்தார். இதனை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.