இந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வரிசைக் கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்
Netflix OTT Release Update: இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வரிசைக் கட்டிக்கொண்டு வெளியாகி வருகின்றது. அதில் சில தோல்விகளை சந்தித்தாலும் பல வெற்றியடைந்து வருகின்றது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடிக்கு வரும் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
விடாமுயற்சி: நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் விடாமுயற்சி (Vidaamuyarchi). இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாரின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்ததால் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் சார்ஜா, ரெஜினா காசண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகை ரம்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்துள்ளார். படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
தக் லைஃப்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் மிக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது தக் லைஃப். இத்திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், பங்கஜ் திருபாத்தி, அலி ஃபசல் எனப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்ஷன் பாணியில் உருவாகி வரும் இந்தப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படம் வெளியீட்டிற்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
குட் பேட் அக்லி: நடிகர் அஜித் துணிவு படத்திற்கு அடுத்ததாக நடித்த படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் வெளியீடு தொடந்து தள்ளிப்போய் கொண்டே இருந்த நிலையில் அவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தார். விடாமுயற்சி படத்தைப் போல இல்லாமல் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தப் படத்தில் அஜித் உடன் இணைந்து நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் திரையரங்கில் படத்தின் ஓட்டம் முடிந்த பிறகு தொடர்ந்து நெட்பிளிக்ஸில் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்ரோ: நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இந்த நிலையில் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் தனது 44-வது படத்திற்காக கூட்டணி வைத்தார் நடிகர் சூர்யா. படத்தில் அறிவிப்பு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சூர்யா ரெட்ரோ ஸ்டைலில் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸில் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.