இவ்ளோ ஹீரோக்களுக்கு விக்ரம் டப்பிங் பேசியிருக்கிறாரா?

அந்த நேரத்தில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம். அஜித்தின் முதல் படமான அமராவதி முதல் பாசமலர்கள் படங்களில் அவருக்கு டப்பிங் பேசியிருக்கிறார். பிரபு தேவாவுக்கு காதலன், ராசையா, விஐபி, மின்சார கனவு போன்ற படங்களுக்கும் பேசியிருக்ககிறார்.

இவ்ளோ ஹீரோக்களுக்கு விக்ரம் டப்பிங் பேசியிருக்கிறாரா?

விக்ரம்

Updated On: 

03 Apr 2025 05:32 AM

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலம் நடிகராக விக்ரமிற்கு (Vikram) அங்கீகாரம் கிடைத்தது. அந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் அவரை சீயான் என அழைக்கத் தொடங்கினர். ஆனால் அதற்கு முன் கிட்டத்தட்ட 10 வருடங்களாக நடிகராக போராடியிருக்கிறார். அவரது அப்பா வினோத் ராஜ், சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன் மகனுக்கு கிடைக்க வேண்டும் என தன் மகனுக்காக போராடியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி தான் விக்ரம் ஹீரோவாக நடித்த முதல் படம். அடுத்தடுத்த படங்கள் அவருக்கு தமிழின் பிரபல இயக்குநர்களான ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை என்ற படத்திலும், எஸ்.பி.முத்துராமனின் காவல் கீதம் படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுக்கும் இளையாராஜா (Ilaiyaraaja) இசை. இருந்தும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவருக்கு சேது தான் அடையாளத்தைத் தந்த படமாக மாறியது.

விக்ரம் இனி நடக்கவே முடியாது என சொன்ன மருத்துவர்கள்

நடிகர் விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே நடிகராக வேண்டும் என்பது கனவு. நடிக்க வந்த புதிதில் விபத்து ஒன்றில் அவரது கால் உடைந்து அவர் இனி நடக்கவே முடியாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கின்றனர். 23 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் சொன்னதை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் எழுந்து நடந்திருக்கிறார். தூள் படத்தின் போது கூட அவருக்கு சண்டைக்காட்சியில் காலில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான காட்சிகளில் காலில் கட்டுப்போட்டு நடித்திருப்பார்.

இவ்ளோ ஹீரோக்களுக்கு விக்ரம் டப்பிங் பேசியிருக்கிறாரா?

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த நேரத்தில் கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார் விக்ரம். அந்த நேரத்தில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம். அஜித்தின் முதல் படமான அமராவதி முதல் பசமலர்கள் படங்களில் அவருக்கு டப்பிங் பேசியிருக்கிறார். பிரபு தேவாவுக்கு காதலன், ராசையா, விஐபி, மின்சார கனவு போன்ற படங்களுக்கும் பேசியிருக்ககிறார். அப்பாசிற்கு காதல் தேசம், பூச்சுடவா உள்ளிட்ட படங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதில் ஹைலைட் என்ன வென்றால் விஐபி படத்தில் பிரபு தேவாவிற்கும் அப்பாஸிற்கும் ஒரே நேரத்தில் டப்பிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது டப்பிங் அனுபவங்கள் தான் அவருக்கு நடிகராக பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. குறிப்பாக அந்நியன் படத்தில் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி வந்த நபராக 3 விதமாக கதாப்பாத்திரங்களாக வேறுபடுத்திக் காட்டி டப்பிங்கில் மிரட்டியிருப்பார். கமலுக்கு பிறகு தனது கேரக்டருக்காக மிகவும் மெனக்கெடுபவர் விக்ரம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமிற்கு கிடைத்த வெற்றி

விக்ரம் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அவர் நடிப்பு பாராட்டப்பட்டாலும் வியாபர ரீதியாக தோல்வியை சந்தித்துவருகின்றன.  இது விக்ரமின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.