‘குட் பேட் அக்லி’ சர்ச்சை – இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா? வித்யாசகர் ஏன் உரிமை கோரவில்லை?

Ilaiyaraaja's Good Bad Ugly Controversy: குட் பேட் அக்லி படத்தில் தன் அனுமதியில்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கிறார். உண்மையில் அவரது புகார் நியாயமானதா? உண்மையில் அவரது பாடல்களின் உரிமை யாரிடம் இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குட் பேட் அக்லி சர்ச்சை - இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா? வித்யாசகர் ஏன் உரிமை கோரவில்லை?

அஜித் குமார் - இளையராஜா

Updated On: 

16 Apr 2025 15:24 PM

ஆதிக் ரவிசந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில் அஜித் குமார் (Ajith Kumar), அர்ஜுன் தாஸ், திரிஷா, சிம்ரன்,சுனில்,பிரியா பிரகாஷ் வாரியர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2025, ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி(Good Bad Ugly). இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அந்தப் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன் மற்றும் வித்யாசாகரின் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா உள்ளிட்ட பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன. அந்தப் பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக ஒத்த ரூபாய் தாரேன் பாடலை பயன்படுத்தி டிரெய்லரை எடிட் செய்யப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் வித்யாசாகரின் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடிய விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட தனது பாடலுக்கு தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என கூறி குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் ஒரு வாரத்தில் பாடல்களை நீக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.  இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு சில ரசிகர்கள் இளையராஜா தயாரிப்பாளிடம் இருந்து சம்பளம் பெற்று இசையமைத்ததால் அந்தப் பாடல்களுக்கு காப்புரிமை பெற அவருக்கு உரிமை இல்லை என விமர்சித்து வருகின்றனர். இளையராஜாவுக்கு ஆதராவான பதிவுகளையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. உண்மையில் இளையராஜாவிற்கு அவரது பாடல்களுக்கான உரிமை இருக்கிறதா? அவரது போராட்டம் நியாயமானதா என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடலுக்கும் இளையராஜா, தன்னிடம் அனுமதி கோராமல் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அப்போது அந்த பாடலை வைத்திருந்த எக்கோ என்ற நிறுவனத்திடம் இருந்து சோனி மியூசிக் வாங்கியதாக விளக்கமளிக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பா.விஜய்யின் இயக்கத்தில் ஜீவா உள்ளிட்டோர் நடிப்பில் இளையராஜாவின் கிளாசிக் பாடல்களில் ஒன்றான என் இனிய பொன் நிலாவே பாடல் பயன்படுத்தப்பட்டது. அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இளையாராஜாவிடம் உரிமை பெற்று பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பாடலின் உரிமை தங்களிடம் இருப்பதாக சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலின் சரிகம நிறுவனத்திடமே உள்ளது என்றும், அந்த பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவிடம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இளையராஜா செய்த தவறு

 

இளையராஜா கடந்த 1975–1990 காலகட்டத்தில் படங்களுக்கான இசை உரிமையை எக்கோ நிறுவனத்திடம் விற்றதாகவும் அந்த கிட்டத்தட்ட 4500 பாடல்களுக்கான உரிமை அந்த நிறுவனத்திடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவை பாடல்களை கேசட்டில் பதிவு செய்த விற்பதற்காகவே கொடுக்கப்பட்டதாகவும் அதன் முழு உரிமையையும் அந்த நிறுவனத்திடம் இல்லை எனவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இளையராஜாவுக்கு பிறகு வந்த இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் போதே அந்தப் படத்தின் பாடல்களுக்கான உரிமையை வாங்கிக்கொண்டனர்.  தற்போது சில படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவர்கள் காப்புரிமை கோராததற்கு காரணம் அவர்களின் பாடல்களுக்கான உரிமை அவர்களிடம் இருப்பதால் அவர்களுக்கு நேரடியாக உரிமத்துக்கான தொகை அவர்களுக்கு கிடைத்துவிடும். ஆனால் இளையராஜா அப்படி எதுவும் போட்டுக்கொள்ளாததால் அவர் ஒவ்வொரு முறையும் போராட வேண்டியிருக்கிறது.