டெஸ்ட் முதல் லெக் பீஸ் வரை… இந்த வீக்கெண்டில் ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ!
நடிகர்கள் நயன்தாரா மற்றும் மாதவனின் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் முதல் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் படம் முதல் இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் இருந்து ஓடிடியில் வெளியான படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

டெஸ்ட்: நடிகர்கள் நயன்தாரா, (Nayanthara) ஆர். மாதவன் (Madhavan) மற்றும் சித்தார்த் (Siddharth) நடிப்பில் உருவாகி வரும் தமிழ் திரைப்படம் டெஸ்ட். இயக்குநர் எஸ். சசிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது. ஒரு விஞ்ஞானி, ஆசிரியர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஆகியோரின் வாழ்க்கை ஒரு முக்கியமான கட்டத்தில் சந்திக்கும் பயணத்தைப் பின்தொடர்கிறது இந்தப் படம். பிரபல தயாரிப்பு நிறுவனமான YNOT ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு நேரடியாக வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.
லெக் பீஸ்: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி வெளியான தமிழ் நகைச்சுவை படமான லெக் பீஸ், அதிக எதிர்பார்ப்புகள் மற்றும் திறமையான நடிகர்கள் இருந்தபோதிலும் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தையேப் பெற்றது. இருப்பினும், நகைச்சுவை மற்றும் நாடகத்தின் கலவைக்கு பெயர் பெற்ற இந்தப் படம், இப்போது டென்ட்கோட்டாவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
இது நான்கு அந்நியர்கள் திடீரென ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறுவதைப் பின்தொடர்கிறது. அவர்கள் தங்கள் புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மாறி எதிர்பாராத சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வத்தைத் தழுவத் தொடங்கும் போது, ஒரு ஆச்சரியமான திருப்பம் அவர்களின் செல்வம் ஒருபோதும் உண்மையானது அல்ல என்பதை வெளிப்படுத்துகிறது, இது அவர்களை அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்துகிறது. படம் தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஜென்டில்வுமன்: நடிகர்கள் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன் மற்றும் லாஸ்லியா மரியனேசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஜென்டில்வுமன். இந்தப் படத்தை இயக்குநர் ஜோசுவா சேதுராமன் எழுதி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
திருமணமான ஒரு பெண்ணின் கணவர் மர்மமான முறையில் காணாமல் போக, அவர் மற்றும் அவரது விவகாரம் பற்றிய மறைந்த உண்மைகளை அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் காதலி கண்டுபிடிப்பது பற்றிய பரபரப்பான கதைக்களத்தைக் கொண்டது இந்தப் படம். ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை லிஜோமோல் ஜோஸ் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து முன்னதாக படக்குழு அறிவித்தது. அதன்படி படம் தற்போது டெண்ட்கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.