Sundar C : பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாம் பொய்.. தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்.. சுந்தர் சி ஓபன் டாக்!
Sundar C About The Box Office Collection : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குநராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவர் தனது இயக்கத்தில் உருவாகும் படங்களிலே ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் வெளியான படம் கேங்கர்ஸ். இந்த படத்தின் நேர்காணல் ஒன்றில் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் போலியானவை என்று சுந்தர் சி கூறியுள்ளார்

சுந்தர் சி
பிரபல இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சியின் (Sundar C) இயக்கத்திலும் நடிப்பிலும் கடைசியாக வெளியான படம் கேங்கர்ஸ் (Gangers). இந்த படத்தில் நடிகர் வடிவேலு (Vadivelu) முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பின் இந்த படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்த படமானது ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பல கெட்டப்பில் நடித்துள்ளார். முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்துடன் (humorous storyline) வெளியான இப்படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் இயக்குநர் சுந்தர் சி மற்றும் வடிவேலு இருவரும் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டனர். இந்த நேர்காணலில் படங்களின் வசூல் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இயக்குநர் சுந்தர் சி கொடுத்த பதில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்து சுந்தர் சி பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய சுந்தர் சி “பாக்ஸ் ஆபிசில் ரூ 500 அல்லது 400 கோடி என சும்மா சொல்லுவார்கள், அது பேப்பரில் போடுவதற்குத்தான் பயன்படும். ஆனால் உண்மையில் எத்தனைத் தயாரிப்பாளர்கள் நொந்து நூலாகி இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்துப் போட்டால் ஹீரோவிற்கு அடுத்த திரைப்படம் கிடைக்காது. அதன் காரணமாகவே பெரிய நடிகர்களின் படங்களின் வசூல் ரூ. 500 கோடி அல்லது ரூ. 1000 கோடி என சும்மா போடுகிறார்கள். பொதுவாக சினிமாவின் மார்க்கெட் சைஸ் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றமாதிரிதான் வசூல் கிடைக்கும்.
அதைத் தாண்டி வசூல் கிடைப்பது போலியானதுதான். எல்லா திரைப்படமும் ரூ. 100 கோடி அல்லது 200 கோடி வசூல் பெறுவது அசாத்தியமானது. ஏதோவொரு ஒன்று இரண்டு படங்கள் வேண்டுமானால் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம். மற்றபடி எல்லாம் படங்களில் கோடி கணக்கில் வசூல் வருவது எல்லாம் சும்மா சொல்வதுதான்” என்று சுந்தர் சி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
கேங்கர்ஸ் திரைப்படம் :
நடிகர் வடிவேலுவின் முழுமையான காமெடியில் வெளியான படம் கேங்கர்ஸ். இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள நிலையில், மிகவும் அருமையாக வந்துள்ளது. இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் இறுதியாக வெளியான அரண்மனை 4, மத கஜ ராஜா மற்றும் கேங்கர்ஸ் என அடுத்தடுத்த படங்கள் மக்களைக் கவர்ந்து வருகிறது. இந்த கேங்கர்ஸ் படத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.