7ஜி ரெயின்போ காலனி 2 படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்!
7G Rainbow colony 2 Movie Update: முதல் பாகத்தில் சோனியா அகர்வால் உயிரிழந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ரவி கிருஷ்ணா உடன் புது நாயகி நடிக்க உள்ளது அந்த போஸ்டரை பார்க்கும் போதே தெரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன் படம் 50 சதவீதம் முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

7ஜி ரெயின்போ காலனி 2
இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இயக்கத்தில் உருவாகி வரும் 7ஜி ரெயின்போ காலனி (7G Rainbow Colony 2) படத்தின் 2-ம் பாகம் குறித்த புது அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்தப் படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா நாயகனாக நடிக்க நடிகை சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் வெற்றியடைந்தது போலவே படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் ரவி கிருஷ்ணாவிற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் ஃபேர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது யுவன் சங்கர் ராஜாவிற்கும் வழங்கப்பட்டது.
கல்லூரியில் படிக்கும் இளைஞராக இருக்கும் ரவி கிருஷ்ணா பல அரியர்களுடன் வீட்டிற்கு அடங்காத பையனாக சுற்றி வருகிறார். ஹவுசிங் போர்ட் அமைப்பில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ரவி கிருஷ்ணா அந்த குடியிருப்புக்கு புதிதாக வரும் நார்த் இந்தியன் குடும்பத்தில் இருக்கும் நடிகை சோனியா அகர்வாலை காதலிக்க தொடங்குகிறார்.
ஒருதலையாக அவரை காதலித்து பின்னாடியே சுற்றி வருகிறார் ரவி கிருஷ்ணா. ஒரு கட்டத்தில் சோனியா அகர்வாலுக்கும் ரவி கிருஷ்ணா மீது காதல் வருகிறது. சோனியாவின் காதலுக்கு பிறகு வேலை எதுவும் செல்லாமல் சுற்றித்திரிந்த ரவி கிருஷ்ணா பொறுப்பாக வேலைக்கு செல்கிறார். நன்றாக செல்லும் இவர்களது காதல் வீட்டிற்கு தெரியவர சோனியாவின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.
சோனியாவை கண்டுபிடித்து அவருடன் திருமணம் செய்ய ரவி கிருஷ்ணா நினைத்துக்கொண்டிருக்க எதிர்பாராத விதமாக சோனியா சாலை விபத்தில் உயிரிழந்துவிடுகிறார். அதனை தொடர்ந்து ரவி கிருஷ்ணா பித்து பிடித்தது போல சுற்றுகிறார். படம் அத்துடன் முடிந்துவிடுகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கடந்த 2024-ம் ஆண்டு செல்வராகவன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் 2-ம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
செல்வராகவன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.