மௌனராகம் படத்திற்கு ரசிகர் கொடுத்த ரிவியூ… அதிர்ந்த மணிரத்னம்
Mani Ratnam Talks About Mouna Ragam Movie: தற்போது கோலிவுட் சினிமாவில் வரும் புதிய இயக்குநர்கள் பலர் தங்களது ஆதர்சன குருவாக ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர் தான் இயக்குநர் மணிரத்னம். தற்போது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் 28 படங்களை இயக்கியுள்ளார் மணிரத்னம்.

மௌனராகம்
இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் 1986-ம் ஆண்டு வெளியான மௌனராகம் (Mouna Ragam) படத்திற்கு ரசிகர் ஒருவர் கூறிய கருத்து தன்னை அதிர்ச்சியாக்கியது என அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த 1956-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிறந்தவர் இயக்குநர் மணிரத்னம். கடந்த 1983-ம் ஆண்டு கன்னட மொழியில் பல்லவி அனுபல்லவி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் மணிரத்னம். அதனை தொடர்ந்து 1984-ம் ஆண்டு மலையாளத்தில் உணரு என்ற படத்தை இயக்கினார். தமிழில் இவர் இயக்கிய முதல் படம் பகல் நிலவு ஆகும். 1985-ம் ஆண்டு நடிகர்கள் முரளி மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து அதே ஆண்டு வெளியான இதய கோவில் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் மோகன் மற்றும் ராதா, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மணிரத்னம் தற்போது நடிகர் கமல் ஹாசனை வைத்து தக் லைஃப் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து சிம்பு, ரவி மோகன், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், பங்கஜ் திருபாத்தி என பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் தனது இயக்கத்தில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மௌன ராகம் படம் வெளியான போது நடந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில் முன்னதாக பேசியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, படம் வெளியானபோது சிட்டில இருந்து வெளிய போய் ஒரு தியேட்டர்ல பாத்தேன்.
அதுக்கப்பறம் படத்த பாக்குறத நிறுத்திடேன் என்று நகைச்சுவையாக பேச ஆரம்பித்தார். அப்போது, தியேட்டரில் பாத்தா முதல் பத்து வரிசை காலியா இருக்கு இரண்டாவது நாளே. சரி அப்படினு வெளிய நின்னுட்டு இருந்தப்போ படம் முடிச்சுட்டு ஒரு ஆள் வேஷ்டிய மடிச்சு கட்டிட்டு வெளிய வராரு.
அப்போ அவரு.. என்னடா இது நாளு அடி போட்டுருந்தா எல்லாம் சரியா இருந்துருக்கும் அந்த பொண்ண என்று சொல்லிக்கிட்டே வந்தாரு. நான் நினச்சன் ஆமா… ஆனா அவரு கருத்துக்கு நான் ஒத்துபோகல இப்படி ஒன்னு இருக்குல என்றும் இந்த பாயிண்ட நான் படத்துல காமிச்சு இருக்கனும். அப்போ அடி ஒரு தீர்வு இல்லனு எடுத்து இருக்கனும் என்றும் மணிரத்னம் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.