Sasikumar : மீண்டும் இயக்குநராக.. வரலாற்றுக் கதையுடன் புதிய படத்தை இயக்கும் சசிகுமார்!
Sasikumar New Project Update : தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சசிகுமார். தற்போது இவர் இயக்குநராக மட்டுமில்லாமல், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாகவே பாகுபலியைப் போல் ஒரு படம் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கதை தள்ளிப்போனதற்கான காரணம் மற்றும் அவரின் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் பற்றியும் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு பெருமையைக் கொண்டிருப்பவர் சசிகுமார் (Sasikumar). ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் (Bala and Amir) உடன் உதவி இயக்குநராகப் (Assistant director) படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான சேது (sethu ) படத்தில் அவருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் அவரே இயக்குநராக அறிமுகமாகினார். இந்த படமானது சூப்பர் ஹிட் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அடுத்ததாக ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு கதாநாயகனாகவும் சிறப்புக் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். இப்படி பல பெருமையைக் கொண்ட இவரின் நடிப்பில் வரும் 2025, மே 1ம் தேதியில் வெளியாகவுள்ள படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family).
இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த படமானது ரிலீசிற்கு தயாராக வருகிறது. மேலும் இந்த படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சசிகுமார், அவரின் இயக்கத்தில் பாகுபலியை போல உருவாக்கவிருந்த படத்தின் கதைக்களம் பற்றிக் கூறியுள்ளார்.
இயக்குநராக அந்த படத்தின் கதையை சூர்யா மற்றும் விஜய்யிடமும் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த படத்தைப் போல புதிய கதைக்களத்துடன் படத்தை இயக்கவுள்ளதாகக் கூறியுள்ளார், அது குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.
புதிய படத்தை இயக்குவது குறித்து சசிகுமார் பேச்சு :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சசிகுமார், அதில் “தொகுப்பாளர் அவரிடம் 2010ம் ஆண்டிலே ஒரு ராஜா ராணி கதை இருந்ததாகவும், அதை சூர்யா மற்றும் விஜய்யிடம் கூறியதாகவும் சொன்னீர்களே, அந்த கதை இன்னும் இருக்கிறதா அல்லது அதைப் படமாக்க யோசனை இருக்கிறதா?” என்று அவரிடம் கேட்டார். அதற்கு சசிகுமார் “அந்த திரைப்படத்திற்காக கதை என்னிடம் இருக்கிறது, ஆனால் ஹீரோ வேண்டுமே. அப்போதுதான் பெரிய பட்ஜெட்டில் எனது திரைப்படத்தை இயக்கமுடியும், அதற்கான ஹீரோ அமைந்தால் நிச்சயமாக அந்த படத்தை இயக்குவேன். அந்த கதையை நான் விடவில்லை, நான் நிச்சயம் அந்த கதையை படமாக்குவேன்.
எந்த ஹீரோ கேட்டாலும் அந்த கதையைத்தான் நான் முதலில் கூறுவேன். அதற்கான ஹீரோ வரும்வரை நிச்சயம் காத்திருப்பேன். மேலும் ஹீரோ அமைந்தாலும் அந்த படத்தை உருவாக்க நிறைய நாட்கள் செலவாகும். ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகளுக்கே அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும், அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் இயக்குவேன். ஆனால் அந்த படத்திற்கு முன் இன்னொரு வரலாற்றுக் கதையை வைத்திருக்கிறேன். அந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும், அந்த படத்தில் நானும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் மற்றும் அந்த படத்தை இயக்குகிறேன். அந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் நடந்து வருகிறது என்று சசிகுமார் கூறியுள்ளார்.