தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்… இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்
Director Karthik Subbaraj: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய ஒரு நேர்காணலில் பேசியபோது தளபதி விஜய்க்கு ஒரு படத்தின் கதையை கூறியது குறித்தும் நடிகர் விஜயுடன் பணிபுரியும் வாய்ப்பை இழந்தது பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கோலிவுட்டின் பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ (Retro) படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், நாசர், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த்ள்ளார். படத்திலிருந்து முன்னதாக வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கலாட்டா ப்ளஸ் யூடிப்பிற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியில் பேசியதாவது, நடிகர் விஜய்க்காக நிறைய ஸ்கிரிப்ட்களை கூறியதாக தெரிவித்தார்.
ஆனால் அவற்றில் எதற்கும் நடிகர் விஜயிடம் இருந்து இறுதி முடிவு கிடைக்கவில்லை. மேலும் கார்த்திக் சுப்பராஜ் தன்னால் கதையை சிறப்பாக சொல்ல முடியாமல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கும் கூட ஒரு ஸ்கிரிப்ட் எழுதியதாக அவர் தெரிவித்திருந்தார்.
என்ன தவறு நடந்தது என்பதை விளக்கிய கார்த்திக் சுப்பராஜ், “ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு விஜய் என்னை அழைத்தார். உண்மையில் அதன் பிறகு நான் அவருக்கு ஸ்கிரிப்ட்களை விவரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியோ நான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை, அதனால் சமீபத்தில் கூட, அவர் ஜன நாயகனுக்காக எச் வினோத்தை இறுதி செய்வதற்கு முன்பு, நான் அவரை அணுகினேன், எப்படியோ எதுவும் சரியாக நடக்கவில்லை, பரவாயில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். விஜயின் 69-வது படமான இது இவரது நடிப்பில் வரும் கடைசி படம் ஆகும். நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் அவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்வதாக முன்னதாக அறிவித்தார்.
இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் சினிமா வட்டாரத்தில் இருக்கும் சிலர் அவ்வப்போது பேட்டிகளில் நடிகர் விஜயின் நடிப்பில் இந்தப் படம் இறுதியாக இருப்பாது. அவர் மீண்டும் நடிப்பார் என்றே தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து இறுதி முடிவு விஜயிடம் இருந்து மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.