Suriya: திடீரென மாறிய கதை.. ரெட்ரோ படம் உருவான விதம் இப்படித்தான்!
Director Karthik Subbaraj : இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. இதில் நடிகர் சூர்யா முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் காதல் மற்றும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு முன் நடிகர் சூர்யாவுடன் வேறு படத்தை இயக்கவிருந்ததாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

தமிழில் பிரபல ஹீரோவாக கலக்கி வருபவர் சூர்யா (Suriya) . இவர் தமிழைத் தொடர்ந்து மேலும் தெலுங்கிலும் முன்னணி கதாநாயகனாகப் படத்தில் நடிக்கவுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக கங்குவா (Kanguva) திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பை விட, திரையரங்கு ரிலீஸில் தோல்வியைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா44 என தற்காலிக டைட்டிலில் உருவாகி வந்த திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). ஆக்ஷ்ன் நிறைந்த காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யாவின் இணையாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள 3வது திரைப்படமாகும். கங்குவா தோல்விக்கு பின் சூர்யாவின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கக்கூடிய திரைப்படமாக இந்த ரெட்ரோ படம் உள்ளது. இந்த படமானது உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு வரும் 2025, மே 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இப்படமானது தமிழில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் வெளியாகிறது. படத்தின் ரிலீஸை தொடர்ந்து , ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பட ப்ரோமோஷனுக்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் சூர்யாவுடன் ரெட்ரோ படத்திற்கு முன் மற்றொரு படத்தை இயக்கவிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன தகவல் :
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதில் “நான் சூர்யா சாருக்கு முதலில் ரெட்ரோ படத்திற்காகப் பேசவில்லை, ஆரம்பத்தில் சூர்யா சாருடன் வேறு படத்திற்காகக் கதையைத்தான் கூறினேன். அவருக்கு நான் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. நான் 3 வருடத்திற்கு முன்னே அவரிடம் கதையைச் சொல்லியிருந்தேன், நான் அப்போது விக்ரமுடன் மகான் படத்தை இயக்கி கொண்டிருந்தேன், நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்தார். அப்போதே நான் முதலில் சொல்லியிருந்த கதையை இயக்கியிருக்கவேண்டியது, மகான் படத்தைத் தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என நானும் அடுத்தடுத்த படத்தை இயக்க தொடங்கிவிட்டேன்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்குப் பின் மீண்டும் நான் சூர்யா சாரை சந்தித்தேன், அப்போது முதலில் கூறியிருந்த கதைக்கு ப்ரீ ப்ரொடக்ஷ்ன் கூட முடியாமல் இருந்தது. அதன் பிறகுதான் நாங்கள் இருவரும் பேசி, சில மாதங்களுக்கு முடித்தேன் . பிறகு அவரிடம் ரெட்ரோ படத்தின் கதையை அவரிடம் கூறினேன். அவரும் ரெட்ரோ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு நல்ல இருக்கு, ஆனால் முற்றிலும் ஆக்ஷனாக இருக்கு, கொஞ்சம் கதாபாத்திரத்தில் மாற்றி எழுதச் சொன்னார். அதன் பிறகு இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா ஒத்துக்கொண்டார்” என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார்.