Ajith Kumar : குட் பேட் அக்லியை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட்… இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்!

Director Adhik Ravichandran : தமிழ் சினிமாவில் கதாநாயகனாகப் படங்களில் கலக்கி வருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படம் ரிலீசாகி திரையரங்குகளைத் தெறிக்கவிட்டு வரும் நிலையில், இப்படத்தைப் பார்த்துவிட்டு அஜித் சொன்ன விஷயம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மனம் திறந்துள்ளார்.

Ajith Kumar : குட் பேட் அக்லியை பார்த்துவிட்டு அஜித் சொன்ன கமெண்ட்... இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்!

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

Published: 

14 Apr 2025 20:33 PM

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் (Adhik Ravichandran) முன்னணி இயக்கத்திலும், நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) அதிரடி நடிப்பிலும் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை, புஷ்பா படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தில் அஜித் குமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்திருந்தார். பொதுவாகப் பெரிய நடிகர்களின் படத்தில் கதாநாயகிகளுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்காது. ஆனால் இந்த படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து, அஜித் மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் ஜோடி இந்த படத்திலும் மிகவும் அருமையாக அமைந்திருந்தது.

இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் மீண்டும் கார் ரேஸில் களமிறங்கியுள்ளார். இந்த படமானது திரையரங்குகளில் வெற்றியடையுமா அல்லது தோல்வியடையுமா என வருத்தப்படாமல் அவர் கார் ரேஸில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் இப்படத்தைப் பார்த்துவிட்டுக் கூறிய கருத்தைப் பற்றிப் பேசியுள்ளார். நடிகர் அஜித் இந்த படத்தைப் பார்த்துவிட்டு “சூப்பர் ஹிட்டாகியுள்ளது” என்று கூறினாராம்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ :

இந்த வீடியோவில் நடிகர் ஆதிக் ரவிச்சந்திரன் “இந்த படத்தின் ரிலீசிற்கு பின் நடிகர் அஜித் சாரிடம் பேசினேன் அவர் “குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றியாகிவிட்டது, ஒரு பிளாக்பஸ்டர் படம். அவ்வளவுதான் அதை மறந்துவிடு, பெரிதும் தலையில் ஏற்றிக்கொள்ளாதே. படத்தின் வெற்றியை உன் தலையில் ஏற்றாதே, தோல்வியை உனது வீட்டிற்குள் எடுத்துச் செல்லாதே. அதனை விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார், அந்த வேளையில் கவனம் செலுத்து என்று நடிகர் அஜித் கூறினார் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

குட் பேட் அக்லி பிளாக் பஸ்டர் :

அஜித்தின் 63வது திரைப்படமான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியது. மேலும் இப்படத்தில் முன்னணி பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர், நடிகை சிம்ரனும் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இப்படமானது இதுவரை சுமார் ரூ.120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது, அதில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் நடனமாடியிருந்தார். “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.