வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்? வைரலாகும் தகவல்
Ajith Kumar with Venky Atluri: இயக்குநர் வெங்கி அட்லூரி தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அஜித் குமார், வெங்கி அட்லூரி
நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விடாமுயற்சி (Vidaamuyarchi) படம் திரையரங்குகளில் வெளியானது. இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி மாதம் 6-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. படத்தின் வலுவான கதைக்களம் இருந்த போதிலும் அஜிதின் வலக்கமான மாஸ் காட்சிகள் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக படம் வசூலில் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் கதையே இல்லை என்றாலும் அஜித்தின் மாஸ் காட்சிகளுக்காகவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஒரு ஃபேன் பாய் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித்தின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். அஜித்தின் மகனாக சலார் படத்தில் நடித்த கார்த்திகேயா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் நடிகரகள் சிம்ரன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் ஆகியோர் நடித்திருந்தனர்.
படம் தற்போது வரை ரூபாய் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்பதற்கு பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி கோலிவுட்டில் சில இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுவதைப் போல டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி பெயரும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி தனுஷின் வாத்தி படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்கள் இடையே அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளுக்கு வாத்தியாக நடிகர் தனுஷ் நடித்திருந்தார். தெலுங்கு பட பாணியில் உருவாகி இருந்தாலும் தமிழில் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
அதனை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் படத்தை இயக்கினார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் அமரன் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிலையில் முன்னதாக கோலிவுட்டில் லக்கி பாஸ்கருக்கு திரையரங்குகள் குறைவாக கொடுக்கப்பட்டிருந்தது. படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்ததால் பின்னர் திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.