‘குரு துரோகி’ – முந்தானை முடிச்சு படத்தில் பாண்டியராஜனை விமர்சித்த பாக்யராஜ்? – அப்படி என்ன பண்ணார்?
Bhagyaraj: முந்தானை முடிச்சு படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் பாண்டியராஜனுக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைக்கிறது. உடனே லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமாரை அழைத்துக்கொண்டு பாக்யராஜிடம் சொல்லாமல் பாதியிலேயே பாண்டியராஜன் கிளம்பியிருக்கிறார். இது பாக்யராஜுக்கு தெரியவருகிறது.

திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜ் (K. Bhagyaraj) தனது படங்களின் திரைக்கதையில் காமெடி(Comedy) மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயங்களை கலந்து சொல்வதில் வல்லவர். குறிப்பாக அந்தரங்கமான விஷயங்களைக் கூட அனைவரும் ரசிக்கும் படி இயல்பாக சொல்வதில் இவருக்கு நிகர் இவரே தான். இவரது வசனங்கள் ஷார்ப்பாக அனைவரையும் கவரக் கூடியதாக இருக்கும். அதே போல ஒரு ஹீரோ என்றால் அழகாக, கம்பீரமாக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தவர் பாக்யராஜ். ஹீரோ என்றால் கண்ணாடி அணிந்து கொண்டு சாதாரணமாக பக்கத்து வீட்டு இளைஞர் போலவும் இருக்க முடியும் என அழுத்தமாக பதிவு செய்தார். அவருக்கு பின்னால் தான் எளிய தோற்றம் கொண்ட இளைஞர்கள் தங்களாலும் திரையில் நாயகனாக ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்கள்.
தொடர் வெற்றிகளால் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக கோலிவுட்டில் அறியப்பட்டார். பெரும்பாலும் இவரது படங்கள் பூஜை போடும்போதே தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமைகள் விற்கப்பட்டுவிடும் என கூறுவர். இவரது திறமைகள் மக்கள் திலகம் எம்ஜிஆரைப் பெரிதும் கவர, பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என அவர் அழைத்து கௌரவப்படுத்தினார். பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்துடன் பாக்யராஜ் முதல் முறையாக இணைந்த படம் முந்தானை முடிச்சு. இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தின் மூலம் தான் ஊர்வசி ஹீரோயினாக அறிமுகமானார். குறிப்பாக இந்தப் படத்தில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் கலக்கிவரும் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருப்பார்.
யார் அந்த குரு துரோகிகள்?
இந்தப் படத்தின் துவக்கத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார். முந்தானை முடிச்சு படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில் பாண்டியராஜனுக்கு இயக்குநர் வாய்ப்பு கிடைக்கிறது. உடனே லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமாரை அழைத்துக்கொண்டு பாக்யராஜிடம் சொல்லாமல் பாதியிலேயே பாண்டியராஜன் கிளம்பியிருக்கிறார். இது பாக்யராஜுக்கு தெரியவருகிறது. அந்த படத்தில் பள்ளி ஆசிரியராக வரும் அவர், தனது வகுப்பில் பிரச்னை செய்யும் 3 மாணவர்களை அழைத்து, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமாரை மறைமுகமாக குறிப்பிடுவது போல், ”உங்களை போன்ற குரு துரோகிளை நான் சந்தித்தே கிடையாது. நீங்க 3 பேரும் நான் தூங்கும்போது கல்லைப் போட கூட தயங்க மாட்டீர்கள்” என்பார்.
பாக்யராஜிற்கு பாண்டியராஜன் கொடுத்த பதிலடி
இதனையடுத்து பாண்டியராஜன் தனது முதல் படமான ‘கன்னி ராசி’ படத்தில் இதற்கு பதில் சொல்லும் விதமாக பாக்யராஜ் போன்ற தோற்றமுள்ளவரை நடிக்க வைத்து, கோவிலில் அவர் சாமியிடம் வேண்டுவது போல, ”அவர் கோபத்தில் இருப்பதாக சொல்கிறார். கோழி மிதிச்சு குஞ்சு சாகவா போது” என வசனம் பேச வைத்திருப்பார். இதனை விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் தெரிவித்த பாண்டியராஜன், அதன் பிறகு பாக்யராஜை சந்தித்து தனது சூழ்நிலையை விளக்கிய பிறகு புரிந்துகொண்டார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
குரு – சிஷ்யன் காம்பினேஷனில் வந்த படங்கள்
அந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்கு பிறகு பாக்யராஜ் கதை திரைக்கதை வசனத்தில் ‘தாய்க்குலமே தாய்க்குலமே’, ‘கபடி கபடி’ போன்ற படங்களில் பாண்டியராஜன் நடித்தார். இதில் கபடி கபடி படத்தை பாக்யராஜே தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.