கன்னடத்தில் பிரபல நடிகருடன் ஜோடி போடும் நடிகை பூஜா ஹெக்டே
Actress Pooja Hegde: நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் முன்னதாக படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde). இவர் தமிழில் 2012-ம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான படம் முகமூடி. சூப்பர் ஹீரோ மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் ஜீவா (Jiiva) நாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவர் பெரிய அளவில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு வாய்ப்பு அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். முகமூடி படத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் அதிக அளவில் நடிக்கத் தொடங்கினார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார்.
இதற்கு இடையில் நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆல வைகுண்டபுரம்லூ படம் தெலுங்கு ரசிகர்களிடம் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள தனது வரவிருக்கும் படமான ரெட்ரோவின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். மேலும் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்திய ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகை பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகப் தெரிவித்துக் கொண்டார். இது நடிகை பூஜா ஹெக்டேவின் டோலிவுட் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையில் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப்புக்கு ஜோடியாக பிஆர்பி: ஃபர்ஸ்ட் ப்ளட் (பில்லா ரங்கா பாஷா) படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கக்கூடும் என்று நம்பதகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டேவோ அல்லது படக்குழுவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த செய்தி உண்மையாகிவிட்டால், இது கன்னட சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டேவின் அறிமுகப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இயக்குநர் அனுப் பண்டாரி இயக்கும் இந்த வரவிருக்கும் படத்தை தயாரிப்பாளர்களான நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிக்கிறார்கள்.