‘பம்பாய்’ படத்தால் சர்ச்சை – மணிரத்னம் வீட்டில் வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம்!

ரோஜா படத்துக்கு கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரத்தின் காரணமாக அதன் பிறகு தேசிய அளவிலான பிரச்னைகளை பேசும் படங்களாக உருவாக்கினார் மணிரத்னம். அதன் பிறகு திருடா திருடா படத்தை இயக்கிய அவர் பின்னர் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த இந்து - முஸ்லீம் கலவரைத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய படம் தான் பம்பாய்.

பம்பாய் படத்தால் சர்ச்சை - மணிரத்னம் வீட்டில் வெடி குண்டு வீசப்பட்ட சம்பவம்!

அரவிந்த் சாமி - மனிஷா கொய்ரலா - மணிரத்னம்

Published: 

28 Mar 2025 04:59 AM

கன்னடப் படமான பல்லவி அனு பல்லவி படத்தின் மூலம் இயக்குநரானார் மணிரத்னம் (Mani Ratnam). தனது இரண்டாவது படத்தை மலையாளத்தில் மோகன்லால், பிருத்விராஜின் அப்பா சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உணரு என்ற படத்தை இயக்கினார். தமிழில் பகல் நிலவு (Pagal Nilavu) படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். பகல் நிலவு படமும், அதன் பிறகு வந்த இதயக் கோவில் படமும் வெற்றிபெறாத நிலையில் அடுத்ததாக அவர் இயக்கிய மௌன ராகம் (Mouna Ragam) படம் தான் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகின்றன. மகேந்திரனுக்கு பிறகு வித்தியாசமான திரை மொழியால் வெகு விரைவிலேயே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பல்லவி அனுபல்லவி தொடங்கி தளபதி வரை அவர் இயக்கிய படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர்.

முதல் படத்திலேயே ரஹ்மானுக்கு கிடைத்த தேசிய விருது

அதன் பிறகு கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமானார் மணிரத்னம். புது புது அர்த்தங்கள் படத்தில் பாலசந்தருக்கும் இளையராஜாவுக்கு ஏற்பட்ட மனக் கசப்பால் இருவரும் இணைந்து பணிபுரிவது இல்லை என முடிவெடுத்தனர். அதன் காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். அந்தப் படம் தான் ரோஜா. தளபதி படத்தை மகாபாரதத்தின் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய மாதிரி ரோஜா படத்தை சாவின் விழிம்பிலிருந்து தன் கணவனை போராடி மீட்ட சத்தியவான் சாவித்திரி கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார். அதில் காஷ்மீர் தீவரவாத பின்னணியில் திரைக்கதை அமைக்க அந்தப் படம் தேசிய படமானது. அந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை முதல் படத்திலேயே பெற்றார் ரஹ்மான்.

தேசிய அளவிலான கதைகளை தேர்ந்தெடுத்த மணிரத்னம்

ரோஜா படத்துக்கு கிடைத்த தேசிய அளவிலான அங்கீகாரத்தின் காரணமாக அதன் பிறகு தேசிய அளவிலான பிரச்னைகளை பேசும் படங்களாக உருவாக்கினார் மணிரத்னம். அதன் பிறகு திருடா திருடா படத்தை இயக்கிய அவர் பின்னர் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த இந்து – முஸ்லீம் கலவரைத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய படம் தான் பம்பாய்.

இந்தப் படத்தில் நிஜத்தில் முஸ்லீமான நாசர் இந்துவாகவும், இந்துவான கிட்டி முஸ்லீமாகவும் நடித்திருப்பார்கள். முதலில் இந்தப் படத்தில் விக்ரம் நடிப்பதாக இருந்திருக்கிறது. புதிய மன்னர்கள் படத்துக்காக தாடி வளர்த்திருந்த விக்ரம் தாடியை எடுக்க முடியாத சூழ்நிலை. அதன் காரணமாக பம்பாய் வாய்ப்பை இழந்தார். அவருக்கு பதிலாக அரவிந்த் சாமி ஹீரோவாகவும், மனிஷா கொய்ராலா ஹீரோயினாகவும் நடித்தனர்.

மணிரத்னம் வீட்டில் குண்டு வீச்சு

இந்தப் படத்தில் பாபர் மசூதி இடிப்பு குறித்த செய்திகள் இடம் பெற்ற செய்தித்தாள்கள் படத்தில் காட்டப்படும். அவற்றை தணிக்கைத் துறையினர் அனுமதிக்க மறுத்திருக்கின்ரனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் படத்துக்கு பக்கபலமாக அமைந்தது. தி கார்டியன் இதழ் சிறந்த 1000 பாடல்கள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருந்தது. அதில் பம்பாய் படத்தின் கண்ணாளனே பாடலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வெளியானபோது சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதில் உச்சகட்டமாக இயக்குநர் மணிர்தனம் தங்கியிருந்த வீட்டில் இரண்டு நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டன அதிர்ஷடவசமாக சிறு காயங்களுடன் மணிரத்னம் உயிர் தப்பினார். அதன் பிறகு சில ஆண்டுகள் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.