பாலுமகேந்திராவால் இளையாராஜாவுக்கு மிஸ்ஸான தேசிய விருது ? கமலின் தேவர் மகனில் நடந்த சம்பவம்
தேவர் மகன் படத்துக்கு இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருந்தன. இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் ரோஜா படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது.

நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) கதை, திரைக்கதை எழுதிய படங்களில் தேவர் மகன் திரைக்கதைக்கு இலக்கனம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. கடந்த 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் பரதன் (Bharathan) இயக்கினார். கமல்ஹாசன் மூவி மேஜிக் என்ற சாப்டவேர் மூலம் வெறும் 12 நாட்களில் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். மூவி மேஜிக் சாஃப்ட்வேர் கொண்டு எழுதப்பட்ட முதல் இந்திய படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது. கமல்ஹாசன் தனது ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
சிங்கார வேலன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது தான் இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி வந்தார் கமல். அந்த படத்தில் வடிவேலு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அவரது நடவடிக்கைகளால் கவர்ந்த கமல், வடிவேலுவை அழைத்து அவர் யார் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்திருக்கிறார். தேவர் மகன் மதுரை பின்னணியில் நடக்கும் கதை என்பதால் வடிவேலு அதற்கு சரியாக இருப்பார் என அவரை ஒப்பந்தம் செய்தாராம். அதுவரை நகைச்சுவை நடிகராக மட்டுமே இருந்த அவர், தேவர் மகனில் கொடுக்கப்பட்ட கனமான வேடத்தை உணர்ந்துகொண்டு இசக்கியாக சிற்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அந்த படம் தான் அவரை திரையுலகினர் கவனிக்க காரணமாக அமைந்தது.
இளையராஜாவால் மாற்றப்பட்ட கங்கை அமரன்?
இயக்குநர் – இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு பேட்டியில், தான் கமலை வைத்து அதிவீர பாண்டியன் என்ற பெயரில் திட்டமிட்டிருந்ததாகவும் கமலும் அதற்கு சம்மதித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இளையராஜா, கமலிடம் மறுப்பு தெரிவித்ததால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த கதையை வைத்து தான் தேவர் மகன் படத்தை கமல் உருவாக்கியதாகவும் தனது பேட்டியில் கங்கை அமரன் தெரிவித்திருக்கிறார். மற்றொரு பக்கம் கமல் தனது பேட்டிகளில் தேவர் மகன் படத்துக்கு காட்ஃபாதர் படமும், கன்னடப் படமான காடு படமும் இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
வன்முறைக்கு காரணமாக அமைந்த தேவர் மகன்
லண்டனில் படிப்பை முடித்துவிட்டு மாடர்ன் இளைஞராக தனது ஊருக்கு ரயிலில் வந்து இறங்கும் கமல் பின்னர் கிளைமேக்ஸில் தனது ஊருக்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு ரயிலில் செல்வது வரை சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருப்பார் கமல். வன்முறையை விட்டுட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா என கமல் அறிவுரை சொல்லியிருந்தாலும் படம் வெளியான காலகட்டங்களில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமாக அமைந்தைது என்பது மிகப்பெரிய முரண். இயக்குநர் மாரி செல்வராஜ் இதுகுறித்து மாமன்னன் பட விழாவில் கமல் முன்னிலையில் பேச பெரும் சர்ச்சை உருவானது.
பாலு மகேந்திராவால் மிஸ்ஸான தேசிய விருது
தேவர் மகன் படத்துக்கு இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருந்தன. இந்தப் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக தேசிய விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் ரோஜா படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானும் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது. இதுதொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய பாலுமேகந்திரா, அந்த ஆண்டு தேசிய விருதுக்கான தேர்வு குழுவில் நானும் இருந்தேன். தேர்வு குழுவின் வாக்கெடுப்பில் இளையராஜா – ரஹ்மான் இருவருக்கும் சம அளவில் ஓட்டுக்கள் விழுந்தன. நான் மட்டும் எனது தேர்வை சொல்லாமல் இருந்தேன். அப்போது இளையராஜா தனது திறமையை நிரூபித்துவிட்டார். ரஹ்மான் புதியவர் என்பதால் அவருக்கு இந்த விருது ஊக்கமளிக்கும் என்பதால் அவருக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்றார்.