கடவுள் கூட விமர்சனத்திற்கு ஆளாகிறார்… மனைவியை பிரிந்து வாழ்வது குறித்து வரும் விமர்சனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பேச்சு
AR Rahman about Separation With Saira Banu: மனைவி சாய்ரா பானுவிடமிருந்து பிரிந்ததைச் சுற்றியுள்ள பொதுமக்கள் விமர்சனம் குறித்து பல மாதமாக மௌனத்தில் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தற்போது தனது மௌனத்தைக் கலைத்து பதிலளித்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகின்றது.

ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (AR Rahman) கடந்த 2024-ம் ஆண்டு தனது மனைவி சாயிரா பானுவுடனான (Saira Banu) பிரிவு குறித்து அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தார். இதுவரை அவர்கள் விவாகரத்து செய்துகொள்ளாத நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் பிரிவு குறித்து பல விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதல் முறையாக அதுகுறித்து தற்போது பேசியுள்ளார். யூடியூபில் நயன்தீப் ரக்ஷித்துடன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மனைவி சாய்ரா பானுவிடமிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து வந்த சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். இந்த ஏ.ஆர்.ரகுமான் – சாயிரா பானு ஜோடி பிரிந்து செல்ல முடிவு செய்ததை தொடர்ந்து அவர்கள் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
இந்த செய்தி திரையுலகினர் மட்டும் இன்றி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் பல வதந்திகளையும் கருத்துகளையும் பரப்பத் தொடங்கினர். இருப்பினும், ஏ.ஆர்.ரகுமான் தனது இயல்பிற்கு ஏற்ப இப்போது வரை அமைதியாகவே இருந்தார்.
ஆனால் தற்போது இதுகுறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் ”பொது வாழ்க்கையில் ஈடுபடுவது என்பது வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு. எனவே அனைவரும் விமர்சனம் செய்யப்படுவார்கள். பணக்காரர் முதல் கடவுள் வரை கூட விமர்சனத்திற்கு ஆளாவார். எனவே நான் யார்?” என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் டாக்சிக் ஆன எந்த விமர்சனமும் வராத வரை நம்மை விமர்சிப்பவர்கள் அனைவரும் கூட நமது குடும்பம் தான் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறினார். மேலும் “நான் ஒருவரின் குடும்பத்தைப் பற்றிச் சொன்னால், யாரோ ஒருவர் என்னுடைய குடும்பத்தைப் பற்றிச் சொல்வார்கள்.
இந்தியர்களாகிய நாம் இதை நம்புகிறோம். யாரும் தேவையற்ற விஷயங்களை பேசக் கூடாது. ஏனென்றால் நாம் அனைவருக்கும் ஒரு சகோதரி, மனைவி, ஒரு தாய் இருக்கிறார்கள்,” என்றும் ரகுமான் தெரிவித்துள்ளார். “யாராவது புண்படுத்தும் வகையில் ஏதாவது சொன்னாலும், ‘கடவுளே, அவர்களை மன்னித்து அவர்களுக்கு வழிகாட்டு’ என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்றும் அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது பலரும் பலவிதமாக கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அப்போது ரகுமானின் மனைவி சாயிரா பானு அவர் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவதாக தெரிவித்தார்.
மேலும் அந்தப் பதிவில், சில ஊடகங்களை தன்னை ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி என்று சில ஊடகங்கள் எழுதி வருகிறீர்கள். நாங்கள் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்தைப் பெறவில்லை அதனால் யாரும் அப்படி கூறாதீர்கள் என்றும் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே சற்று மன ஆறுதலை அளித்தது.