Good Bad Ugly Review: ”தரமான ஃபேன் பாய் சம்பவம்”.. அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ!
குட் பேட் அக்லி படமானது மிக குறுகிய காலத்தில் வெளியான அஜித் நடித்துள்ள படமாகும். இந்த படத்தின் டைட்டில் தொடங்கி கிளைமேக்ஸ் வரை சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே குட் பேட் அக்லி படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.

குட் பேட் அக்லி விமர்சனம்
நடிகர் அஜித்குமார் (Ajithkumar) நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இந்த படம் இன்று (ஏப்ரல் 10) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் த்ரிஷா (Trisha), சிம்ரன், அர்ஜூன் தாஸ், பிரசன்னா, சுனில் குமார், பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் அஜித்தின் கேரியரின் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முழுக்க முழுக்க அஜித்தின் ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாய் சம்பவம் என்ற பெயரில் செய்திருக்கும் இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா? , படத்தின் விமர்சனம் உள்ளிட்ட விஷயங்களைக் காணலாம்.
இந்த படத்தின் ட்ரெய்லர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. படம் முழுக்க அஜித்தின் பழைய படங்களின் காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருந்தது.
படத்தின் கதை
கேங்க்ஸ்டரான அஜித் தன்னுடைய குடும்பத்திற்காக அந்த தொழிலை விடுகிறார். மேலும் தான் செய்த தப்புக்காக சிறைக்கும் செல்கிறார். அதேசமயம் தனது மகனிடம் எந்த தொழிலால் தன் மீது குடும்பம் வெறுப்புக்காட்டியதோ, அதை வெளிக்காட்டாமல், தன்னைப் பற்றிய உண்மைகள் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். அஜித்தின் மனைவியாக வரும் த்ரிஷாவும் அதை பின்பற்றுகிறார். இப்படியான நிலையில் சிறையில் இருந்து வெளியே வரும் அஜித், தனது மகன் போதைக்கடத்தல் வழக்கில் ஒரு கும்பல் சிக்க வைக்கிறது.
இதனைக் கண்டு வெகுண்டெழும் அஜித் மீண்டும் கேங்ஸ்டராக மாறி அந்த கும்பல் யார்?, அவர்களுடைய நோக்கம் என்ன? என்பதை கண்டறிந்து, தனது மகனை மீட்கிறாரா என்பது தான் குட் பேட் அக்லியின் கதையாகும்.
படமே ரெஃபரன்ஸ் தான்
மகனுக்காக களம் காணும் அதே தமிழ் சினிமாவின் வழக்கமான கதை தான் என்றாலும், அதனை தன்னுடைய திரைக்கதை மேஜிக்கால் மாஸ் காட்டியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். என்ன செய்தால் ரசிகர்கள் மகிழ்வார்கள், கொண்டாடுவார்கள் என இன்ச் பை இன்ச் தீட்டியிருக்கிறார். ஒரு இயக்குநராக நீண்ட நாட்களுக்குப் பின் ரசிகர்கள் எப்படி அஜித்தை பார்க்க வேண்டும் என சொன்னார்களோ அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
மாஸான வசனங்கள், கோட் சூட்டில் வருவது, தனது படங்களின் வசனங்களைப் பேசுவது, அட்டகாசமாக டான்ஸ் ஆடுவது என ரசிகர்களை ஏமாற்றாமல் விருந்து படைத்துள்ளார் அஜித். த்ரிஷா, பிரியா வாரியர், பிரசன்னா, சுனில் குமார், பிரபு ஆகியோருக்கு திரைக்கதையில் பெரிய இடம் இல்லையென்றாலும் தங்களுடைய காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஒத்த ரூபா தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஆகிய 2 பழைய பாடல்களையும் சரியான இடத்தில் பயன்படுத்தி 90ஸ் கிட்ஸ் ரசிகர்களை அமர்க்களப்படுத்தியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ஜி.வி.பிரகாஷூம் தன் பங்கிற்கு இசையில் பட்டையை கிளப்பியிருக்கிறார். கதையில் லாஜிக் இல்லை, திரைக்கதை சுமார் என பேசாமல் 2.30 மணி நேரம் நம்மை ரசிக்க வைக்கும் அளவுக்கு படம் அமைந்திருக்கிறது.
தியேட்டரில் படம் பார்க்கலாமா?
கண்டிப்பாக தொடர் விடுமுறையை கொண்டாட குட் பேட் அக்லி என்பது சிறந்த தேர்வாகும். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். குடும்பங்களும் வந்து பார்க்கும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்புறம் என்ன.. உடனே டிக்கெட் போடுங்க.. குட் பேட் அக்லி பார்த்து என்ஜாய் பண்ணுங்க!