அடிப்படை கருணையை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது – நடிகை சிம்ரன் பேச்சு
Actress Simran: நடிகை சிம்ரன் சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களை கடந்தும் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகை சிம்ரன் (Actress Simran). குட் பேட் அக்லி படத்தின் சமீபத்தில் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் சிம்ரனின் காம்போவைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தில் த்ரிஷா தான் நாயகி என்றாலும் சிம்ரனின் காட்சிகளுக்கு திரையரங்குகள் அதிர்ந்தது. இந்தப் படத்திற்காக நடிகை சிம்ரன் வைரலானதை விட சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் சக நடிகை ஒருவரைப் பற்றி பேசிய விசயம் படு வைரலாக சமூக வலைதளத்தில் மாறியது. மேலும் பெயர் குறிப்பிடாமல் நடிகை சிம்ரன் பேசியதால் அது என்ன நடிகை என்று நெட்டிசன்கள் ஆராயத் தொடங்கினர்.
நியுஸ் 18 செய்திக்கு நடிகை சிம்ரன் அளித்த சமீபத்திய பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை, வரவிருக்கும் படம், வைரலான பேச்சு என அனைத்தையும் பேசியுள்ளார். அதில், டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து பேசிய நடிகை சிம்ரன், இது ஒரு குடும்பப் படம். தற்போது எல்லாம் இதுபோன்ற படங்களை நாம் சினிமாவில் அதிகம் பார்ப்பதில்லை.
இந்தப் படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் நிறைந்துள்ளது. சினிமா ரசிகர்கள் மற்றும் மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்தப் படம் நிச்சயாமக ஒரு பாசிட்டிவான உணர்வைத் தரும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்தப் படம் புலம்பெயர்ந்தோரின் அனுபவத்தையும், குறிப்பாக இலங்கையிலிருந்து வந்தவர்களின் அனுபவத்தைத் பற்றி பேசுவது குறித்து விளக்கம் அளித்த சிம்ரன், அந்த அரசியல் குறித்து எனக்குத் தெரியும் என்று தெரிவித்தார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் இலங்கை தமிழர்கள் குறித்த தீவிரமான பிரச்னைகளை பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை சிம்ரன் டூரிஸ்ட் ஃபேமிலி படம் முற்றிலும் வேறுபட்டது என்று தெரிவித்தார். மேலும் இது ஒரு நகைச்சுவையான, உணர்ச்சிபூர்வமான ஃபாமிலி ட்ராமா என்பதையும் தெரிவித்தார். உண்மையான பிரச்சினைகளை இந்தப் படத்தில் கவனத்தில் கொண்டிருந்தாலும் இந்தப் படத்தின் நோக்கம் ரசிகர்களை மகிழ்வித்து அவர்களுக்கு புன்னகையை வரவழைப்பதே என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், ஒரு நடிகையின் பேச்சு அவரை மிகவும் காயப்படுத்தியது என்று பேசியது இணையத்தில் வைரலானது. அதில் உண்மையாகவே என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை சிம்ரன் உண்மையில் பெரிதாக எதுவும் இல்லை. நாம் அனைவரும் அடிப்படை ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
ஒரு தவறான கருத்தை நீங்கள் புறக்கணிக்கலாம். ஆனால் யாராவது எல்லை மீறினால், நீங்கள் அதைக் கடந்து செல்ல தேவையில்லை. அதனை கடுமையாக கண்டிக்க வேண்டும். கருணையை பலவீனமாக தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. இன்றைய சமூக ஊடக உலகில், நாம் நமது உண்மையான சுயத்தை இழக்காமல் இருப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.