டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தது குறித்து பேசிய சிம்ரன்
Actress Simran: 2000-ம் ஆண்டிற்கு பிறகு நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான பம்மல் கே சம்மந்தம், கண்ணத்தில் முத்தமிட்டால், ஏழுமலை, பஞ்சதந்திரம், ரமணா, அரசு, நியூ, வாரணம் ஆயிரம், பேட்ட, மகான், அந்தகன் ஆகிய படங்களும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகை சிம்ரன் (Simran) 1995-ல் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும் குறைந்த கால அளவிலேயே பல படங்களில் நடித்துவிட்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என பான் இந்திய நடிகையாக வலம் வந்தார் நடிகை சிம்ரன். தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பலர் நடிகை சிம்ரனுடன் ஜோடிப் போட்டு நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர்கள் விஜய் (Vijay), அஜித், சூர்யா, பிரசாந்த், பிரபுதேவா, கமல் ஹாசன், சரத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டிற்கு பிறகு நாயகியாக நடிப்பதில் இருந்து விலகி தொடர்ந்து அம்மா, வில்லி என பல கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
அஜித்தின் குட் பேட் அக்லி:
இந்த நிலையில் நடிகை சிம்ரன் இறுதியாக அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்தார். இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருந்தாலும், சிம்ரனின் போர்ஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதற்கு காரணம் சிம்ரன் மற்றும் அஜித் குமார் இணைந்து நடித்த வாலி படத்தின் ரெபரன்ஸ் காட்சிகள் குட் பேட் அக்லியில் இடம் பெற்றிருந்ததுதான். படத்தில் குறைவான காட்சிகளுக்கு மட்டுமே நடிகை சிம்ரன் வந்திருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களால் அதிமகாமப் பாராட்டப்பட்டது.
சிம்ரன் சொன்னது என்ன?
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகை சிம்ரனின் நடிப்பில் தமிழில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதில் இருந்தே இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சசிக்குமார் நடித்துள்ளார்.
இந்த நிலையில் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் சிம்ரன் ஏன் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசினார்.
அப்போது பேசிய அவர், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு அது மிகவும் பிடித்தது அதனால் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டும் இன்றி சசிக்குமார் நல்ல இயக்குநர் மற்றும் நடிகர் அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
மேலும், சினிமாவில் ஜூனியர் சீனியர் என்பது எல்லாம் இல்லை. திறமை மட்டுமே முக்கியம். அந்த வகையில் நடிகர் சசிக்குமார் உடன் நடிப்பது அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன் எனவும் நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.