காதல் குறித்தும் முன்னாள் காதலர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசிய ஸ்ருதி ஹாசன்!
Actress Shruti Haasan: நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி படத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் பிரீத்தி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

உலக நாயகன் கமல் ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகளாக ஜனவரி மாதம் 28-ம் தேதி 1986-ம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). பாடகி, இசையமப்பாளர் மற்றும் நடிகை என சினிமாவில் தன்னை நிரூபித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்தப் படத்திற்காக நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசனின் நடிப்பில் வெளியான 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகிய படங்கள் வெளியாகி சில படங்கள் நல்ல வரவேற்பையும் சில படங்கள் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் முன்னணி நடிகர்களான தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் என பலருடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஃபிலிம்பேர்க்கு அளித்தப் பேட்டி ஒன்றில் தனது காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் வாழ்க்கையில் ஏதாவது மாற்ற வேண்டுமா என்று கேட்டபோது அவர் பேசியதாவது, தன் தேர்வுகளுக்கு வருத்தப்படவில்லை என்றும், தனக்கு முக்கியமான சிலரை காயப்படுத்தியதற்காக வருத்தப்படுவதாகவும் ஸ்ருதி கூறினார்.
தான் தவறு செய்ததாகவும், ஆனால் அது வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும், இப்போது தான் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்க நேரத்தை செலவிடுவதாகவும் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். நான் சிலரை காயப்படுத்தியிருக்கிறேன், நான் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தனது டேட்டிங் வாழ்க்கையைப் பற்றிய கருத்துகளுக்கு பதிலளித்த அவர், நம் அனைவருக்கும் அந்த ஒரு ஆபத்தான முன்னாள் வாழ்க்கை இருக்கிறது. அதைத் தவிர, நான் எந்த வருத்தமும் இல்லாமல் முந்தைய வாழ்க்கையை முடிக்கிறேன். அதனால்தான், ஓ, இது எத்தனாவது காதலன்? என்று மக்கள் கேட்டுக்போது அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது இதுதான்.
நீங்கள் புரிந்து கொள்ளவில்லை உங்களை பொருத்தவரை இது ஒரு எண், எனக்கு நான் விரும்பும் அன்பைப் பெறுவதில் எத்தனை முறை தோல்வியடைந்தேன் என்பதுதான். எனவே, அதைப் பற்றி நான் மோசமாக உணரவில்லை. ஆனால் நான் சிறிய அளவே மோசமாக உணர்கிறேன். நானும் ஒரு மனிதர் தானே என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.