கண்ணாடிப்பூவே பாடலுடன் நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ… கொண்டாடும் ரசிகர்கள்
Actress Pooja Hegde Insta Video: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள நிலையில் படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முன்னதாக தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தற்போது ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திலிருந்து முன்னதாக வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அது ரசிகர்களிடையே ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சமீபக காலமாக இந்தப் படம் தொடர்பாக நடிகை பூஜா ஹெக்டே பேசுவதும், படம் தொடர்பாக அவர் வெளியிடும் பதிவுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இருப்பினும் ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே தனது கதாபாத்திரமான ருக்மிணியைப் குறித்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் படத்தில் வரும் கண்ணாடிப் பூவே பாடலையும் இணைத்துள்ளார். ரசிகர்கள் அந்த வீடியோவைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பூஜா ஹெக்டே சேலை அணிந்து திருமணமான பெண்ணைப் போல உடையணிந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் நடிகை பூஜா ஹெக்டே “உங்களுடைய ருக்மிணி” என்று எழுதியுள்ளார். இந்தப் பதிவில் ரசிகர்கள் அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்கள் 2D என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இணைந்து தயாரித்துள்ளனர். படம் 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களிடையே இந்தப் படம் சூர்யாவின் கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் பேசியது இணையத்தில் கவனம் பெற்றது. அதில் நடிகர் சூர்யா உன்மையான கண்ணாடிப்பூவே என் ஜோ தான் என்று தனது மனைவி ஜோதிகாவிற்கு தெரிவித்தார். மேலும், இந்தப் படத்தில் சூர்யாவின் அப்பாவாக நடித்த நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மேடையில் கண்ணாடிப் பூவே பாடலைப் பாடியது இணையத்தில் வைரலானது.