சூர்யாவின் ரெட்ரோ படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
Retro Movie Trailer & Audio: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ரெட்ரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூர்யா ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ள இந்தப் படத்தில் இருந்து முன்னதாக வெளியான சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது.

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ (Retro) படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கங்குவா. இந்தப் படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட் செலவில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியையே சந்தித்தது. இந்தப் படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும் படத்தில் சூர்யாவின் முயற்சி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. படம் குறித்து பல விமர்சனங்கள் இருந்த போதிலும் சூர்யாவின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை என்பதே உண்மை. படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது இரைச்சலான பின்னணி இசை தான்.
பின்னணி இசை படத்தின் வசனத்தை கேட்க முடியாத அளவிற்கு அதிகமாக இருந்தது என்றே படத்தை பார்த்தவர்களின் முக்கிய விமர்சனமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகர்கள் திஷா பதானி, கோவை சரளா, பாபி தியோல், நடராஜன், யோகிபாபு, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் தனது 44 வது படத்திற்காக கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பு வீடியோவில் நடிகர் சூர்யா ரெட்ரோ ஸ்டைலில் காட்சியளித்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அதனை தொடர்ந்து படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. முன்னதாக படத்தில் பெயர் ரெட்ரோ என்று டைட்டில் டீசரைப் படக்குழு வெளியிட்டது. அதுவே ட்ரெய்லர் போல மாஸாக இருந்தது என்று ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
மேலும் இந்தப் படத்தில் இருந்து இதுவரை வெளியான 3 பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக கண்ணாடி பூவே மற்றும் கனிமா ஆகிய இரண்டு பாடல்களும் சூப்பர் டூட்ட்பர் ஹிட் அடித்தது. இந்த இரண்டு பாடல்களும் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 18-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியிடப்படும் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Tamil New Year and Vishu wishes to All. #Retro Trailer & Audio from 18th April. #TheOne#LoveLaughterWar#RetroFromMay1 🔥🔥 pic.twitter.com/QUvEHvmwzL
— karthik subbaraj (@karthiksubbaraj) April 14, 2025
இந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம், நாசர், சுஜித் சங்கர் என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.