நடிகர் சித்தார்த் பர்த்டே ஸ்பெஷல்… அவரது நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்

Actor Siddharth Movies: நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டெஸ்ட். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் மாதவன் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

நடிகர் சித்தார்த் பர்த்டே ஸ்பெஷல்... அவரது நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்

நடிகர் சித்தார்த்

Published: 

17 Apr 2025 16:39 PM

நடிகர் சித்தார்த் (Siddharth) இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பான் இந்திய நடிகராக வலம் வரும் இவர் நடிகை அதிதி ராவை (Aditi Rao) கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். நட்சத்திர தம்பதிகளின் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து தனது படங்களுக்காக செய்திகளில் இடம் பிடிக்கும் நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக பிரச்சனைகளை பேசியும் செய்திகளில் இடம் பிடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார். நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் 4 மொழிகளில் படங்கள் வெளியாகி இருந்தாலும் தமிழில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பாய்ஸ்: கடந்த 2003-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாய்ஸ். இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தார்த், பரத், நகுல் தமன், மணிகண்டன், ஜெனிலியா ஆகியோர் நடித்திருந்தனர். இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

காதலில் சொதப்புவது எப்படி: கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான படம் காதலில் சொதப்புவது எப்படி. இந்தப் படத்தில் சித்தார்த் உடன் இணைந்து நடிகை அமலா பால் நடித்திருந்தார். காதலை மையமாக வைத்து உருவான இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

உதயம் NH4: நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் உதயம் NH4. இந்தப் படத்தை இயக்குநர் மணிமாறன் இயக்கியிருந்தார். படிப்பிற்காக பேங்கலூர் செல்லும் நடிகர் சித்தார்த் காதல் ஏற்பட்டு அங்கிருந்து நாயகி அஷ்ரிதா ஷெட்டியுடன் ஊரைவிட்டு செல்ல முயல்கிறார். அவர் காதலில் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஜிகர்தண்டா: நடிகர் சித்தார்த் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். க்ரைம் மற்றும் காமெடியை மையமாக எடுத்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் சித்தர்த் உடன் இணைந்து நடிகர்கள் லக்‌ஷ்மி மேனன், பாபி சிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

சித்தா: நடிகர் சித்தார்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியான படம் சித்தா. இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.