ஆடுஜீவிதம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை வென்ற பிருத்விராஜ் சுகுமாரன்
Actor Prithviraj Sukumaran: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் எம்புரான். இதில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெம்முடு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிருத்விராஜ் சுகுமாரன்
மலையாளத்தில் வெளியான ஆடுஜீவிதம் (Aadujeevitham: The Goat Life) படத்திற்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran) வென்றுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். மலையாளத்தில் பழம்பெரும் நடிகர்களான சுகுமாரன் மற்றும் மல்லிகாவின் இரண்டாவது மகன் தான் பிருத்விராஜ். சினிமா குடும்ப பின்னணியில் பிறந்த இவர் நடிப்பில் மீது இருந்த ஆர்வம் காரணமாக 2002-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2005-ம் ஆண்டு கனாக் கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தமிழ் சினிமா ரசிகர்களைப் பொருத்தவரை பிருத்விராஜ் படங்கள் என்றாலே ஃபீல் குட் என்று தோன்றும் அளவிற்கு அவரது நடிப்பு இருந்துள்ளது.
தமிழில் இவரது நடிப்பில் வெளியான பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும் என அனைத்தும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியாகும் படங்களும் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பிருத்விராஜ் விருது வாங்கும் வீடியோ:
My boy receiving the Best actor Award for the unanimous acting in #aadujeevitham @PrithviOfficial ❤️🔥 so happy for you 😘🥰. #PrithvirajSukumaran pic.twitter.com/LMFtZwuUgX
— Shazzz🦉 (@SHAHAMMUHAMMED1) April 16, 2025
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இயக்குநர் ப்ளெசி இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஆடு ஜீவிதம் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் வெளியானது. இந்த நஜீப் என்பவரி கதாப்பாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக உடல் எடையை குறைத்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நஜீப் என்பவர் கேரளாவில் இருந்து குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்கிறார். அங்கு ஏமாற்றப்பட்டு ஒரு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலையை செய்கிறார். அப்போது சரியான உணவு இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறுகிறார். அதனை தொடர்ந்து அங்கு இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது படத்தின் கதை.
இந்த நிலையில் கேரள அரசு வழங்கும் மாநில அரசு விருதில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு ஆடு ஜீவிதம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை ரசிகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடதக்கது.