ஆனந்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு இப்படிதான் கிடைத்தது – நடிகர் பாவா லட்சுமணன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Bava Lakshmanan talks about Aanandham movie: தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே தனக்கு என ஒரு அடையாளத்தைப் வைத்திருப்பவர் நடிகர் பாவா லட்சுமணன். நடிகர் மம்முட்டியின் நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தின் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஆனந்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு இப்படிதான் கிடைத்தது - நடிகர் பாவா லட்சுமணன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

பாவா லட்சுமணன்

Updated On: 

13 Apr 2025 10:22 AM

நடிகர் மம்முட்டி (Mammootty) நாயகனாக நடித்த ஆனந்தம் (Aanandham) படத்தில் காமெடி நடிகர் பாவா லட்சுமணன் (Bava Lakshmanan) நடிக்க எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் ஆனந்தம். இந்தப் பாத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். மேலும் பாடலாசிரியர் யுகபாரதி இந்தப் படத்தின் மூலம் தான் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கூட்டுக்குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யாவிற்கு நான்கு மகன்கள். முதலாவதாக மம்முட்டி, இரண்டாவதாக முரளி, மூன்றாவதாக அப்பாஸ், நான்காவதாக ஷ்யாம் கணேஷ் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக பிறந்திருப்பார்கள். சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு மம்முட்டி மற்றும் முரளி இருவரும் மளிகை கடையை நடத்தி குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருப்பார்கள்.

தம்பிகளான அப்பாஸ் மற்றும் ஷ்யாம் இருவரும் நன்கு படிப்பார்கள். முதல் மகன் மம்முட்டிக்கு தனது அண்ணன் மகள் பூணமை திருமணம் செய்ய நினைப்பார் ஸ்ரீவித்யா. ஆனால் வசதி குறைவு காரணமாக மம்முட்டிக்கு அந்த பெண்ணை  திருமணம் செய்ய முடியாமல் போகும். பிறகு தேவையானியை திருமணம் செய்துக்கொள்வார் மம்முட்டி.

அதனை தொடர்ந்து முரளிக்கு தனது மாமா மகள் ரம்பாவை திருமணம் செய்து வைப்பார்கள். இதற்கு இடையே அந்த ஊரிலேயே பெரிய பணக்காரராக இருக்கும் விஜயகுமாரின் மகள் சிநேகாவை அப்பாஸ் காதலிப்பார். இந்தப் படத்தில் திருடனாக வரும் நபர் அந்த வீட்டிலேயே வேலைக்கு சேரும் சம்பவமும் நடக்கும். இந்த கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் பாவா லட்சுமணன் தான் எப்படி அதற்கு தேர்வானார் என்பது குறித்து பேசியிருப்பார். முதலில் அந்த திருடன் கதாப்பாத்திரத்திற்கு வடிவேலுவை பேசியுள்ளனர். ஆனால் அவர் கால் சீட் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து ரமேஷ் கண்ணா மற்றும் சார்லியிடம் பேசியுள்ளனர் ஆனால் அவர்கள் 40 நாட்கள் கால்சீட் கொடுக்க முடியாது என்று அந்தப் படத்தை நிராகரித்துள்ளனர். இதனை தொடர்ந்து பாவா லட்சுமணன் தான் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக லிங்குசாமி மம்முட்டியிடம் கூறியுள்ளார்.

அவரைப் பார்த்த மம்முட்டி பன்னி மாதிரி இருக்கான் இவன் எப்படி நடிக்கப்போகிறான். முதலில் நடிக்கட்டும் அப்பறம் பாப்போம் என்று கூறிய மம்முட்டி பாவா லட்சுமணனின் நடிப்பைப் பார்த்துவிட்டே இவனே நடிக்கட்டும் என்று கூறியதாக பாவா லட்சுமனன் தெரிவித்துள்ளார்.