அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் மாஸ் ஓபனிங்… குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Good Bad Ugly Movie box office collection day 1: இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி என்ற மாஸ் பொழுதுபோக்கு திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அஜித் குமாரின் சினிமா வாழ்க்கையில் மாஸ் ஓபனிங்... குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி

Published: 

11 Apr 2025 06:33 AM

நடிகர் அஜித் குமாரின் (Ajith Kumar) குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி (Vidaamuyarchi) படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் இந்த குட் பேட் அக்லி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் குட் பேட் அக்லி படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சாக்னில்க்.காம் வெளியிட்ட செய்தியின்படி, வியாழக்கிழமை ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 28.50 கோடி வரை வசூல் செய்தது.

திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றது, நாள் முழுவதும் சராசரியாக 76 சதவீத வசூலைப் பதிவு செய்தது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில், மாலை காட்சிகளுக்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான கூட்டம் இருந்தது. இது மக்கள் மத்தியில் அஜித் குமாரின் படத்தின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

இதன் காரணமாக முன்னதாக வெளியான அஜித் படங்களின் சிறந்த வசூல் சாதனையை குட் பேட் அக்லி தற்போது எட்டியுள்ளது. இறுதியாக 2022 ஆம் ஆண்டில் வெளியான அஜித்தின் வலிமை படத்தின் முதல் நாளில் ரூபாய் 28 கோடி வசூலித்த சாதனையை இது முறியடித்துள்ளது. 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் அஜித்தின் முந்தைய வெளியீடான விடாமுயர்ச்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் நாளில் ரூபாய் 22 கோடி வசூலித்தது குறிப்பிடதக்கது.

தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி தமிழ் மொழி ஆக்‌ஷன் காமெடி திரைப்படமாகும். இதில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். முன்னதாக விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா தான் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிம்ரன், பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.