அஜித் தவிர்த்த ஹிட் படங்கள் – மற்ற ஹீரோக்களுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு!
அஜித் முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்காமல் விட்டவை, அவருக்கு கதை பிடிக்காமல் நடிக்க மறுத்தவை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவர் நடிக்க மறுத்த கதைகளில் பிற நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர்.

அஜித் குமார்
தமிழ் சினிமாவில் (Tamil Cinema) ஒரு ஹீரோ தவிர்த்த படங்கள் மற்ற ஹீரோக்கள் நடித்து சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அதிலும், நடிகர் அஜித் (Ajith Kumar) சில முக்கியமான படங்களை மறுத்துவிட்டதன் காரணமாக, அந்த படங்கள் மற்ற நடிகர்களுக்கு போய் சூப்பர் ஹிட்டான சம்பவங்கள் பல உள்ளன. அஜித் முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்காமல் விட்டவை, அவருக்கு கதை பிடிக்காமல் நடிக்க மறுத்தவை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவர் நடிக்க மறுத்த கதைகளில் பிற நடிகர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர். இந்த கட்டுரையில், அஜித் நடிக்க மறுத்த படங்களில், மற்ற ஹீரோக்களுக்கு ஹிட்டான சில முக்கியமான திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்!
நேருக்கு நேர்
ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு அஜித் – விஜய் இணைந்து நடிக்கவிருந்த படம் நேருக்கு நேர். மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அஜித் நடிக்கவிருந்தார். ஒரு சில காட்சிகள் நடித்த அவர் பின்னர் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார்.
ஜீன்ஸ்
ஷங்கர் இயக்கத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. முதலில் இந்தப் படத்தில் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தில் அஜித் நடித்திருந்தால் இரட்டை வேடங்களில் நடித்த முதல் படமாக ஜீன்ஸ் அமைந்திருக்கும். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வாலி படத்தில் அது நிறைவேறியது.
நந்தா
சேது படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கிய படம் நந்தா. இந்தப் படத்துக்கு முதலில் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டார் பாலா. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் அந்தப் படத்திலிருந்து விலக அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு போனது. சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் நந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெமினி
காதல் மன்னன், அமர்களம் வெற்றிக்கு பிறகு அஜித் – இயக்குநர் சரண் மூன்றாவது முறையாக இணையவிருந்த படம். ஆனால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகிக் கொள்ள அந்த வாய்ப்பு விக்ரமுக்கு போனது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடல் பெரிய ஹிட்டானது.
திருமலை
நடிகர் விஜய்க்கு ஆக்சன் ஹீரோ அந்தஸ்தை பெற்று தந்த படம் இது. இயக்குநர் கே.பாலசந்தர் தயாரித்திருந்த இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். படத்தில் விஜய் மெக்கானிக்காக நடித்திருப்பார். இந்தப் படத்தை முதலில் அஜித்தை மனதில் வைத்து எழுதியதாக இயக்குநர் ரமணா தெரிவித்திருந்தார். காரணம் அஜித் மெக்கானிக்காக இருந்தவர் என்பதால் அவருக்கு இந்தக் கதையை பொறுத்தமாக இருக்கும் என கருதியதாக அவர் தெரிவித்தார்.
கஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம். ஆமிர்கான் நடிப்பில் இயக்குநர் முருகதாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்ய அங்கு இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி ஹிந்தியில் ரூ.100 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படத்திலும் முதலில் அஜித் நடிக்கவிருந்தார். மிரட்டல் என்ற பெயரில் அந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரும் வெளியானது. நேருக்கு நேர், நந்தா, கஜினி என சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற படங்களிலும் முதலில் அஜித் நடிக்கவிருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கடவுள்
இயக்குநர் பாலா இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்திலும் முதலில் அஜித் நடிக்கவிருந்தார். அஜித்திற்கும் பாலாவிற்கும் பிரச்னை ஏற்பட படத்திலிருந்து வெளியேறினார். இந்தப் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து நீண்டதாக தலைமுடியை வளர்த்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளித்திருந்தார் அஜித். அந்தப் படத்துக்கு பதிலாக அவர் நடித்த படங்கள் தான் பரமசிவம், திருப்பதி போன்றவை.