பொன்னியின் செல்வன் பட காப்புரிமை பிரச்னை – ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு

Copyright Dispute: பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் தனது தந்தையின் சிவ ஸ்துதி என்ற பாடலின் சாயலில் இருப்பதாக ஃபியாஸ் வசிஃபுதீன் தாகர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடியை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் பட காப்புரிமை பிரச்னை - ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு

விக்ரம் - ஏ.ஆர்.ரஹ்மான்

Published: 

25 Apr 2025 18:20 PM

ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) இசையில் தக் லைஃப் (Thug Life) படத்தில் இருந்து ஜிங்குச்சா என்ற பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. கமல்ஹாசன் எழுதிய இந்தப் பாடலை வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியிருக்கின்றனர். கமல்ஹாசன் (Kamal Haasan) – மணிரத்னம் இணைந்து எழுதியுள்ள இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். நாயகன் படத்துக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்தப் படத்தில் சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தக் லைப் படத்தைத் தொடர்ந்து ரஹ்மான் இசையில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் தேரே இஷ்க் மெயின், ராமாயணா, பிரபு தேவாவின் மூன் வாக், ஜெயம் ரவியின் ஜீனி, ராம் சரணின் பெத்தி ஆகிய படங்கள் உருவாகிவருகின்றன. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கும் முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் எதிர்பாராத காரணத்தால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார்.

பொன்னியின் செல்வன் பட காப்பி ரைட் சர்ச்சை

இந்த நிலையில் பிரபல பாடகர் ஃபியாஸ் வசிஃபுதீன் தாகர் என்பவர் கடந்த 2003 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது தந்தை நசீர் ஃபியாசுதீன் தாகர் மற்றும் ஷாகிருதீன் தாகர் ஆகியோர் உருவாக்கிய சிவ ஸ்துதி என்ற பாடலில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் பொன்னியின் செல்வன் பாடலான வீரா ராஜ வீரா என்ற பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அந்த பாடலை நீக்க வேண்டும் எனவும் தங்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி, தாகரின் பாடலின் நோட்டுகள் மற்றும் அமைப்புகள் ரஹ்மானின் பாடலுடன் ஒரே மாதிரியாக இருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே, “வீர ராஜா வீரா” பாடல் முழுமையாக சிவ ஸ்துதி பாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிவதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து பாடலுக்கான கிரெடிட்டை பாடலை உருவாக்கியவருக்கு வழங்கவும், ரூ. 2 கோடியை டெல்லி உயர்நீதிமன்றத்தில் செலுத்தவும் வாசிஃபுதீன் தாகருக்கு ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

காப்பிரைட் பிரச்னை தமிழ் சினிமாவில் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ, ஏன் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் தன் அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா ரூ.5 கோடி கேட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.