மாதம் ரூ.2,800 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்!

Recurring Deposit Scheme | அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த தொடர் வைப்பு நிதி திட்டம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் சேமிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதம் ரூ.2,800 முதலீடு செய்தால் போதும்.. ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்!

மாதிரி புகைப்படம்

Published: 

02 Apr 2025 16:30 PM

பாதுகாப்பான சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்றால் அதற்கு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) மிக சரியான தேர்வாக இருக்கும். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், அஞ்சலங்கள் மூலம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படுவதால் இதில் சிக்கல்கள் மிக குறைவு.

குறிப்பாக நிதி இழப்பு, மோசடி உள்ளிட்ட எந்த வித அபாயமும் இல்லாத திட்டமாக இது கருதப்படுகிறது. முதலீடு செய்யும் தொகை பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதே சமயம் அதற்கு லாபமும் கிடைக்க வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இது மிக சரியான தேர்வாக இருக்கும். அபாயங்கள் குறைவு என்பதால் ஏராளமான மக்கள் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்

அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit), தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), மாத வருமான திட்டம் (Monthly Investment Scheme) உள்ளிட்ட பல அசத்தல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பாதுகாப்பான வருமானத்திற்கு இவை மிக சரியான தேர்வாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

நிலையான வைப்பு நிதி, மாத வருமான திட்டம் ஆகியவற்றை பொருத்தவரை திட்டத்தின் தொடக்கத்திலேயே மொத்த தொகையையும் செலுத்த வேண்டும். ஆனால், தொடர் வைப்பு நிதி திட்டத்தில் அத்தகைய சிக்கல் எதுவும் இல்லை. தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாதம் மாதம் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஒவ்வொரு ஆண்டும் அந்த தொகையை அதிகரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.2,800 முதலீடு செய்வதன் மூலம் எவ்வாறு ரூ.2 லட்சம் வரை சேமிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

தொடர் வைப்பு நிதி திட்டம் – ரூ. 2,800 முதலீடு செய்து ரூ.2 லட்சம் சேமிப்பது எப்படி?

அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம் மொத்தம் 5 ஆண்டுகள் கால அளவீடு கொண்டது. இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.2,800 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி 5 ஆண்டுகளில் சுமார் ரூ.1,68,000 வரை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், வட்டியாக மட்டுமே உங்களுக்கு ரூ.31,824 கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.1,68,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.31,824 ஆகியவை சேத்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.1,99,824 கிடைக்கும்.

மாதம் மாதம் பெரிய தொகை செலுத்த முடியாது என நினைக்கும் நபர்கள் மாதம் வெறும் ரூ.1,000 முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.