Aadhaar Card : ப்ளூ ஆதார் கார்டு என்றால் என்ன?.. யாரெல்லாம் அதனை பயன்படுத்தலாம்?
What is Blue Aadhaar | ஆதார் கார்டு இந்திய குடிமக்களின் முக்கிய அடையாள அட்டையாக உள்ள நிலையில், ப்ளூ ஆதார் கார்டும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நபர்களுக்கு இந்த ப்ளூ ஆதார் கார்டு என்றால் என்ன என தெரியாமல் உள்ளது.

ஆதார் கார்டு
ஆதார் அட்டை (Aadhaar Card) இந்திய குடிமக்களின் மிக முக்கிய அடையாள அட்டையாக (Identity Card) உள்ளது. ஆதார் தனி நபர் அடையாள அட்டையாக உள்ள நிலையில், அரசின் சேவைகளை இது இல்லாமல் செய்ய முடியாது. குறிப்பாக ஒரு குழந்தை பிறப்பது முதல் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை பல இடங்களில் ஆதார் முக்கிய ஆவணமாக கோரப்படுகிறது. ஆதார் தனியாக அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல், ஆதார் பான் இணைப்பு, ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு ஆகியவையும் கட்டாயமாக உள்ளது.
ஆதார் கார்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயமாக உள்ளது. பொதுவாக 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பொதுவான ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அதற்கும் குறைவான வயது கொண்ட குழந்தைகளுக்கு என ப்ளூ ஆதார் கார்டு (Blue Aadhaar Card) வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த ஆதார் கார்டின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ப்ளூ ஆதார் கார்டு என்றால் என்னை?
ஆதார் கார்டு 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கிய அடையாள அட்டையாக இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) ஆதார் கார்டை அறிமுகம் செய்தது. இந்த ஆதார் கார்டு தான் நீல நிற ஆதார் கார்டு அல்லது ப்ளூ ஆதார் கார்டு என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆதார் அட்டை ஆகும்.
பொதுவாக ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, மொபைல் எண், கைரேகை பதிவு, கண் ரேகை பதிவு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். ஆனால், குழந்தைகளுக்கான இந்த ப்ளூ ஆதார் கார்டில் கைரேகை, கண் ரேகை உள்ளிட்ட எந்த வித பயோமெட்ரிக் (Biometric) விவரங்களும் இடம்பெற்றிருக்காது. 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் தெளிவாக இருக்காது என்பதால் அவை இல்லாமல் ப்ளூ ஆதார் வழங்கப்படுகிறது.
ப்ளூ ஆதார் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை
குழந்தைகளுக்கான இந்த ப்ளூ ஆதார் கார்டில் பயோமெட்ரிக் விவரங்களுக்கு பதிலாக குழந்தையின் தனித்துவ அடையாள எண், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் UID (Unique Identification Number) உடன் இணைக்கப்பட்ட கார்டுடன் இணைத்து இந்த ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டை குழந்தைகள் 5 வயதை அடையும் வரை மட்டும் தான் செல்லுபடியாகும். குழந்தைகளுக்கு இந்த ஆதார் கார்டை வாங்க விரும்பும் பெற்றோர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு பிறப்பு சான்றிதழ் அல்லது குழந்தை பிறந்ததற்கான மருத்துவமனை பில் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.