உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!

Importance of Credit Score: கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரது பொருளாதார நிலைமையை காட்டும் முக்கியமான அளவுகோலாக அமைந்துள்ளது. புதிதாக கடன் பெற, இஎம்ஐ மூலம் பொருட்கள் வாங்க கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருப்பது அவசியம். உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உங்க கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கணுமா? அப்போ இந்த தப்ப பண்ணாதீங்க!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Apr 2025 14:49 PM

இன்றைய காலகட்டத்தில் நம் நிதி நிலையை காட்டும் முக்கியமான அளவுகோலாக கிரெடிட் ஸ்கோர் (Credit Score) நிலவுகிறது. சமீபத்தில் ஒரு திருமணத்தின்போது  வங்கியில் (Bank) பணியாற்றும் பெண்ணின் உறவினர் மாப்பிள்ளையின் கிரெடிட் ஸ்கோர் விவரங்களைக் கேட்டிருக்கிறார். பின்பு மாப்பிள்ளையின் கிரெடிட் ஸ்கோரை பார்த்த அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாப்பிள்ளைக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்திருக்கின்றன. மேலும் இஎம்ஐ (EMI) மூலம் பல பொருட்களை வாங்கியிருக்கிறார். அந்த மாப்பிள்ளை லட்சங்களில் சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் அதில் பெரும்பாலும் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கே போதுமானதாக இருக்கும். இதனையடுத்து பெண் வீட்டார் திருமணத்தை உடனடியாக நிறுத்தியிருக்கின்றனர். இது ஒருவர் தனது கிரெடிட் ஸ்கோரை சரியாக கையாள்வது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

மேலும் ஒருவருக்கு நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அவருக்கு அவசர காலங்களில் தேவைப்படும் கடன் உடனடியாக கிடைக்கும்.  மேலும் சிறந்த சலுகைகளை பெற முடியும். இது தவிர, வங்கிகள் அவரை நம்பிக்கை மிகுந்து வாடிக்கையாளராக கருதும்.  ஆனால், குறைந்த கிரெடிட் ஸ்கோர் பல பிரச்னைகளை உருவாக்கக்கூடும். முக்கியமாக நமது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயம் அதிகம்.

கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடிய சில பொதுவான தவறுகள்

  • கிரெடிட் கார்டுகளின் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தாமல் இருப்பது.
  • அதிகமாக கடன் வாங்குவது.
  • கடனை சரியாக திருப்பி செலுத்தாமல் இருப்பது. உதாரணமாக சில மாதங்கள் சரியாக இஎம்ஐ செலுத்தியிருப்போம், ஆனால் அடுத்த சில மாதங்கள் தவறினால் நமது கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.
  • அடிக்கடி வங்கிகளில் கடன் கேட்டு விண்ணிப்பிக்கும்போது
  • நிலையான வருமானமில்லாமல் கடன் வாங்கும்போது

மேலே குறிப்பிட்ட தவறுகள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். அதனால் கிரெடிட் ஸ்கோரை பற்றி சரியாக புரிந்துகொள்வது நமக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

கிரெடிட் யூட்டிலைசேஷன் ரேஷியோவின் முக்கியத்துவம்

நிதி நிலைமையை சரியாக கையாள விரும்புபவர்கள் கிரெடிட் யூட்டிலைசேஷன் ரேஷியோ (Credit utilisation Ratio) குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஒருவர் தனது கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் கிரெடிட் லிமிட் அடிப்படையில் நீங்கள் பயன்படுத்தும் தொகையின் சதவிகிதம். ஒருவரது கிரெடிட் யூட்டிலைசேஷன் ரேஷியோ 30 சதவிகிதத்துக்குள் இருந்தால், கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது. உதாரணமாக ஒருவரது கிரெடிட் லிமிட் ரூ. 1 லட்சம் என வைத்துக்கொண்டால், அவர் மாதம் ரூ.30,000 வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்கு மேல் பயன்படுத்தத் தொடங்கினால் அவரது பொருளாதார நிலை கேள்விக்குறியாக்கும். இதனால் அவரது கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பு ஏற்படும்.

கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம்

மேலும் கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பாக ஒருவர் ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு தடவையாவது கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்ப்பது அவசியம். அதில் ஏதாவது தவறான தகவல்கள் இருந்தால் உடனடியாக திருத்திக்கொள்ளலாம். உதாரணமாக நாம் கடன் தொகையை முழுமையாக செலுத்தியிருப்போம் அல்லது மாதத் தவணையை சரியாக செலுத்தியிருப்போம். ஆனால் அது குறித்து கிரெடிட் ரிப்போர்டில் அப்டேட் செய்யப்படவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோரில் பாதிப்பை ஏர்படுத்தும். அதனால் அடிக்கடி கிரெடிட் ரிப்போர்ட்டை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.