பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? 2025-ல் குறைந்த வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்!
Personal Loan Guide : அவசர தேவைகளுக்காக பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? கடன் பெறுவதற்கு முன் வங்கிகளின் வட்டி விகிதங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். 2025 ஆண்டுக்கான குறைந்த வட்டி விகிதம் வழங்கும் டாப் 5 வங்கிகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஒருவர் தனது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் வகையில் வங்கி (Bank) அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் பெறும் கடன் பெர்சனல் லோன் (Personal Loan) எனப்படுகிறது. குறிப்பாக திருமணம், மருத்துவ செலவுகள் போன்ற அவசர தேவைகளுக்காக பெர்சனல் லோன் பெறப்படுகிறது. ஹோம் லோன் (Home Loan), கார் லோன் போல அல்லாமல், பெர்சனல் லோன் வாங்கும்போது வட்டி சற்று அதிகமாக விதிக்கப்படும். மேலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசால் அங்கீரிக்கப்பட்ட நிதி நிறுவங்களில் பெர்சனல் லோன் பெறுவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. நமது நிதி நிலைமையை புரிந்துகொண்டு சரியான வங்கியையும் சிறந்த வட்டியையும் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமாகும். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் சிறந்த வட்டி விகிதங்களுடன் வழங்கப்படும் பெர்சனல் லோன் திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இந்த தகவல்கள் என்டிடிவி பிராஃபிட் மற்றும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
1.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India – SBI)
இந்த வங்கியின் தொடக்க வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.30 சதவிகிதமாக உள்ளது.
2. இந்துஸ்இண்ட் வங்கி (IndusInd Bank)
மிகக்குறைந்த வட்டி விகிதம் வழங்கும் தனியார் வங்கிகளில் இந்துஸ்இண்ட் முன்னிலை வகிக்கிறது. இந்த வங்கியில் ஆண்டுக்கு தொடக்க வட்டி விகிதம் 10.49 சதவிகிதமாக உள்ளது.
3. ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank)
இந்த வங்கியில் வட்டி விகிதமானது 10.85 சதவிகிதம் முதல் 16.65 சதவிகிதம் வரை கிடைக்கிறது. மேலும் இந்த வங்கியில் நமக்கு கிடைக்கும் கடன் தொகையில் 2 சதவிகிதம் வரை வங்கி கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
4. ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank)
இந்த வங்கியின் தொடக்க வட்டி விகிதம் ஆண்டுக்கு 11.25 சதவிகிதமாக உள்ளது. வட்டி விகிதம் 11.25 சதவிகிதம் முதல் 22 சதவிகிதம் வரை மாறுபடுகிறது. மேலும் இந்த வங்கியில் கடன் ரூ.50,000 முதல் ரூ.40 லட்சம் வரை கடனாக பெறலாம்.
5. பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)
நிதி நிறுவனமான இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10 சதவிகிதம் முதல் 31 சதவிகிதம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு நிலை போன்ற காரணங்களின் அடிப்படையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
சிறந்த வட்டி விகிதங்களை பெற டிப்ஸ்
ஒருவர் 750க்கும் மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் அவர், குறைந்த வட்டி விகிதங்களை பெற முடியும். குறைந்த கடன் தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்த குறுகிய கால அவகாசத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. நிலையான வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு நிலை, வங்கிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும். பண்டிகை காலங்களின்போது வங்கிகள் வழங்கும் சிறப்பு சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)