சம்பாதிக்கும் பெண்களா நீங்கள்? – நிதி சிக்கலை திறம்பட கையாள சில டிப்ஸ்!
பெண்களும் சுயமாக முன்னேற தொடங்கி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பணத்தைச் சரியாக நிர்வகிப்பது, சேமிப்பு, செலவு கட்டுப்பாடு, கணவருடன் நிதி விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது போன்றவை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 20 வயதில் தொடங்கி 50 வயது வரை சரியான திட்டமிடல் வேண்டும் என சொல்லப்படுகிறது.

நீர், நிலம் போன்று இந்த உலகம் இயங்க அடிப்படையான காரணிகள் ஒன்றாக பணம் (Money) பார்க்கப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பணமானது வெவ்வேறு வடிவங்களில் நம்மிடையே புழங்குகிறது. அப்படியான பணம் உங்களை அடைவதற்கு முன்பும், பின்பும் உங்களின் தனிப்பட்ட நடவடிக்கையில் (Personal life) மாற்றமிருப்பதை காணலாம். அதனால் தான் பணம் பத்தும் செய்யும் என சொல்லிவைத்துள்ளார்கள். வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களும் இலக்குகளும் மாறும்போது அதற்கான பணத்தேவையும், வருமான வழி காரணங்களும் (Income) மாறுகின்றது.
ஒரு குடும்பம் என்ற கட்டமைப்பை எடுத்துக் கொண்டால் அங்கு செல்வத்தை வாரி குவிப்பது மட்டுமே சிறந்த நிதி நிலைமை கொண்ட இடம் என சொல்லி விட முடியாது. சரியான வருமான வழியை தேர்வு செய்து அதனை திறம்பட நிர்வகிக்க வேண்டும். செல்வத்தை உருவாக்குவது என்பது ஒரு மாரத்தான் போன்றது. அது வாழ்நாள் முழுவதும் நிதி சார்ந்த விஷயங்களை கையாள உதவும்.
இதில் பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் வெவ்வேறு வயதுகளில் தனித்துவமான சூழ்நிலைகளை பொருளாதார ரீதியாக எதிர்கொள்கிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என பார்க்கலாம்.
பணம் சம்பாதிப்பதே செலவு செய்வதற்கு தான்
இன்றைய உலகில் பணம் சம்பாதிப்பதே செலவு செய்வதற்காக தான் என கூற்றோடு பணியை ஆண், பெண் இருபாலரும் தொடங்கியிருப்பார்கள். அது மிகவும் தவறு. பணம் சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் என்ற கூற்று சரி, அதனை எங்கு, எப்படி செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும், அப்படியாகத்தான் சேமிப்பின் அவசியத்தை பெரியவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். சம்பாதிப்பது நீங்கள் விரும்பியபடி செலவு செய்வதற்கான சுதந்திரத்தை கொடுத்தாலும் அது ஒரு கட்டத்தில் குழப்பங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்தி விடுகிறது.
எனவே எப்போதும் உங்கள் நிதித் தேவைகளையும் இலக்குகளையும் பூர்த்தி செய்ய போதுமான பணத்தைக் கொண்டிருப்பதை உறுதிச் செய்யுங்கள்.வீண் செலவு செய்வதற்கான பல தூண்டுதல்கள் பெண்களுக்கு இருந்தாலும் ஒருபோதும் சேமிப்பை கைவிட வேண்டாம். சம்பளத்தில் 30-40 சதவீதத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதமும் செலவினங்களை கண்காணித்து வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் சேமிக்க தொடங்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் உங்கள் லட்சியங்களான வீடு, வாகனம்,நகை உள்ளிட்டவற்றை அடைய முடியும்.
வெளிப்படையாக பேசுங்கள்
திருமணமான பெண்கள் தன் கணவன், அவர்கள் குடும்பத்தாரிடம் சம்பளம், செலவு விவரம் உள்ளிட்டவற்றை கேட்கவே தயங்குவார்கள். இது தவறாகும். வாழ்க்கைத்துணையின் சம்பளம், செலவு விவரம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து வைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார ரீதியான நிச்சயமற்ற தன்மையை தவிர்க்கலாம்.
பல பெண்கள் தங்கள் வருமானத்தை கணவர் நிர்வகிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் கணவரின் கடன்களை திருப்பிச் செலுத்தும் சுமையையும் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நிதி விஷயத்தில் இருவரும் சரிபாதியை பகிர்ந்தால் கடனும் குறையும், சேமிப்பும் பெருக்கும்.
குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், திருமணம், ஓய்வு வயதில் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பெண்கள் நிதி விஷயங்களில் திடமான முடிவை எடுத்து செயல்படுத்த வேண்டும். 20-30 வயது சேமிக்க தொடங்கும் வயதாக இருக்க வேண்டும். 30-40 வயது செல்வத்தை அதிகரிக்கும் காலமாக அமைக்க வேண்டும். 40-50 வயதை கடனை குறைத்து விட்டு பணி ஓய்வு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.