மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.20,050 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்!
Senior Citizen Savings Scheme | மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருவதுதான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும்.

மாதிரி புகைப்படம்
ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொருளாதாரம் (Economy) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாத சவாலான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே அத்தகைய சிக்கல்களை தவிர்க்க பொதுமக்கள் சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் திட்டம்
விலைவாசி உயர்வு, பண வீக்கம் உள்ளிட்டவை காரணமாக ஒவ்வொருவரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும் என கூறப்படுகிறது. சாதாரன பொதுமக்களுக்கே எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் நிதி சிக்கல்களால் பல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ள நிலையில், மூத்த குடிமக்களுக்கு அது கடும் சவால்களை ஏற்படுத்திவிடும்.
எனவே தான் மூத்த குடிமக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில் சில சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் மாதம் ரூ.20,050 வரை வருமானம் ஈட்ட முடியும். இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது, என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் 5 ஆண்டு கால அளவீடு கொண்ட ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் நிலையில், 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதுமட்டும்னறி, கூடுதல் சிறப்பாக இந்த திட்டத்திற்கு பிரிவு 80சி இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.20,050 வரை வருமானம் பெறலாம்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், முதலீடு செய்த தொகைக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.60,150 வட்டியாக கிடைக்கும். அதன்படி, இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரு.20,050 வரை வருமானம் ஈட்டலாம்.
மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டம் 5 ஆண்டு கால அளவீட்டை கொண்டுள்ள நிலையில், திட்டத்தின் முதிர்வில் வட்டியாக மட்டும் ரூ.12.03 லட்சம் பெறலாம். மொத்தம் 5 ஆண்டுகள் கால அளவீட்டை கொண்ட இந்த திட்டத்தை, மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து கூடுதல் லாபத்தை பெறலாம்.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.