மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?

Senior Citizen Savings Scheme : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நமது முதலீட்டை பாதுகாப்பதுடன் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கலில் இருந்து பாதுகாக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் வரிவிதிப்பின் படி இந்த திட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதத்தில் மாற்றமா?

மாதிரி புகைப்படம்

Published: 

21 Apr 2025 19:34 PM

தொடர்ச்சியாக வேலை பார்த்து வருமானம் ஈட்டியவர்கள் திடீரென ஓய்வு பெறும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக நிலையான வருமானம் இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயம், முதியவர்களுக்கு பெரும் சவாலாக அமைகிறது. இந்த நிலையில், அவர்களது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழியாக சேமிப்பு திட்டங்கள் (Savings Scheme) அமைகின்றன. மத்திய அரசும் (Central Government), அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும், தபால்துறையும் (Post Office) இத்தகைய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி, முதியவர்களின் ஓய்வு கால வாழ்க்கையை பொருளாதார ரீதியாக பாதுகாக்கின்றன. இவை மாத வருமானம், மருத்துவச் செலவுகள், குடும்ப நிவாரணம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றன.

இத்தகைய திட்டங்களில் முக்கியமானது மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme – SCSS). இது நமது முதலீட்டை பாதுகாப்பதுடன், நல்ல வட்டி விகிதமும் தரும் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகும். 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமலுக்கு வரும் புதிய வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

வட்டி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்?

எகனாமிக்ஸ் டைம்ஸில் வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் முந்தைய காலாண்டில் (ஜனவரி – மார்ச் 2025) வழங்கப்பட்ட வட்டி விகிதம் 8.2% ஆக இருந்தது. தற்போது, ஏப்ரல் – ஜூன் 2025 காலாண்டிற்கும் எந்த மாற்றமும் இன்றி  அதே விகிதமான 8.2% தான் தொடர்கிறது.  இந்த திட்டத்தில் ரூ. 1000 முதல் அதிக பட்சமாக ரூ.30 ல்ட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் 5 வருடங்களுக்கு நீங்கள் முதலீடு செய்யலாம். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு உங்கள் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம்.

SCSS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் அருகில் உள்ள தபால் நிலையத்தின் மூலம் முதலீடு செய்யலாம். மொத்தம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 5 வருட காலத்திற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். மேலும் 3 ஆண்டுகள் வரை இந்த திடடத்தில் நீடித்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு 8.2 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.  நிலையான வட்டி  கிடைக்கும் என்பதாலும், அரசின் ஆதரவுடன் செயல்படும் திட்டம் என்பதாலும், இது நம்பகமான ஓய்வூதிய வருமானத்துக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறது. இந்த திட்டத்துக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.

மேலும் மாற்றமின்றி 8.2% வட்டி விகிதம் தொடரும் என்பதால், மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் தைரியமாக முதலீடு செய்யலாம். இதுவே ஓய்வு காலகட்டத்தில் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்துக்கு உதவும்.

இந்த திடத்திலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் விலகலாம். திட்டத்தில் ஒரு வருடத்துக்குள்ளாக விலகினால் உங்களுக்கு வட்டி கிடைக்காது. அதே போல 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்குள் இந்த திட்டத்தில் இருந்து விலகினால் முதலீட்டில் 1.5 சதவிகிதம் பிடித்துக்கொள்ளப்படும்.அதே போல, 2 வருடங்களுக்கு மேலாக 5 வருடங்களுக்குள்ளாக விலகினால் முதலீட்டில் இருந்து 1 சதவிகித தொகை பிடித்துக்கொள்ளப்படும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)