பழைய தங்க நகைகளை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படுமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

Old Gold Jewelry Sale | தமிழர்கள் பல காலமாக தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது தங்கத்தின் விலை உச்சத்தில் உள்ள நிலையில், பலர் தங்களது பழைய நகைகளை விற்பனை செய்ய யோசனை செய்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு பழைய நகைகளை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படுமா என்பது குறித்து பார்க்கலாம்.

பழைய தங்க நகைகளை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படுமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

06 Apr 2025 21:53 PM

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை (Gold Price) கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025, ஜனவரி மாதம் ஒரு கிராம் 22 காரட் தங்கம் விலை ரூ.7,150-க்கு ஒரு சவரன் தங்கம் ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2025, ஏப்ரல் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதாவது 4 மாத இடைவெளியில் தங்கம் விலை ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

வரலாறு காணாத உச்சத்தை கண்ட தங்கம் விலை

தங்கம் எப்போதுமே சிறந்த  முதலீடாக கருதப்படுகிறது. காரணம், தங்கத்தின் விலை நிதானமான வளர்ச்சியில் இருக்கும். அதாவது, மெது மெதுவாக உயர்வை சந்தித்துக்கொண்டே செல்லும். ஒருவேளை தங்கத்தின் விலை குறைந்தாலும் அது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த முதலீடாக உள்ள நிலையில், பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ள நிலையில், பலரும் தங்கத்தை விற்பனை செய்ய யோசனை செய்து வருகின்றனர். ஆனால், தங்கத்தை விற்பனை செய்தால் வரி செலுத்த வேண்டுமா என பலருக்கும் சந்தேகம் எழுகிறது. இந்த நிலையில், தங்கத்தை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தை விற்பனை செய்தால் வரி விதிக்கப்படுமா?

தங்க நகைகளை விற்பனை செய்தால் மூலதன ஆதாயங்கள் என்ற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்க நகைகள் தாத்தா, பாட்டியால் வாங்கப்பட்டது என்றால் அது மூலதன சொத்தாக கருதப்படும் என்றும் கூறுகின்றனர். மேலும், 2001 ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னர் வாங்கியிருந்தால், ஏப்ரல் 2001 ஆம் தேதியின் நிலவரப்படி, நியாயமான சந்தை மதிப்பின் அடிப்படையில் அதனை வாங்கியதற்கான செலவும் நிர்ணயம் செய்யப்படும் என கூறுகின்றனர்.

நீண்டகால மூலதன வரி Vs குறுகிய கால மூலதன வரி

இதேபோல வாங்கிய தங்கத்தை 24 மாதங்களுக்குள் அதாவது இரண்டு ஆண்டுகளுக்குள் விற்பனை செய்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரியும், 24 மாதங்களுக்கு மேல் அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படும் என கூறுகின்றனர். அதன் அடிப்படையில், நீங்கள் தாத்தா, பாட்டி வாங்கிய தங்க நகைகளை விற்பனை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் விற்பனை செய்யும் நகைகளின் மீது நீண்ட கால மூலதன வரி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.