FD-ஐ விட அதிக லாபத்தை அள்ளி தரும் மூன்று சிறப்பு திட்டங்கள்.. முழு விவரம் இதோ!
High Return Investments | சேமிப்பு அல்லது முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை தேர்வு செய்யும் நிலையில், அதனை விட அதிக பலன்களை வழங்கும் சேமிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பாதுகாப்பான பொருளாதாரத்தை (Economy) உருவாக்க வேண்டும் என்றால் முதலீடு (Investment) அல்லது சேமிக்க (Saving) வேண்டும். இதனை உணர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் சேமிக்க தொடங்கிவிட்டனர். அவ்வாறு சேமிக்க அல்லது முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்களின் முக்கிய தேர்வாக உள்ளது FD (Fixed Deposit) என அழைக்கப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம். சிறந்த லாபத்தை தரக்கூடிய சேமிப்பு திட்டமாக இது இருந்தாலும், இதனை விட சிறப்பு அம்சங்கள் கொண்ட சில சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவை என்ன, அதில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்
தபால் நிலையங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் சேமிப்பு திட்டங்கள் தான் இந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் (Post Office Savings Scheme). இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டியும் வழங்கப்படுவதால் இதன் மூலம் சிறந்த லாபத்தை பெற முடியும். தபால் நிலைய சேமிப்பு திட்டங்களை பொருத்தவரை தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Scheme) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) ஆகிய திட்டங்களை தேர்வு செய்யலாம். இந்த திட்டங்களுக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி சலுகையும் கிடைப்பதால் பல அம்சம் கொண்ட சேமிப்பு திட்டங்களாக இவை உள்ளன.
கடன் பத்திரங்கள்
நிலையான வைப்பு நிதி திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை விட அதிக வட்டியை எதிர்ப்பார்க்கும் நபர்கள் இந்த கடன் பத்திரங்களை தேர்வு செய்யலாம். கடன் பத்திரங்கள் குறித்து குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு கடன் கொடுத்து அசலை பெரும் வரை அதற்கான வட்டியை பெற்று பிறகு அசலையும் பெறுவதுதான் இந்த கடன் பத்திரங்கள். தனியார் நிறுவனங்கள் பல இந்த கடன் பத்திரங்களை வெளியிடும் நிலையில், ரிஸ்க் எடுக்க விரும்பாத நபர்கள் அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) வழங்கும் கடன் பத்திரங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
தங்க முதலீடு
சேமிப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் தங்க முதலீடு. தங்கம் காலம் காலமாக நம்பகமான மற்றும் அதிக லாபம் தரும் முதலீடாக உள்ளது. பணவீக்கத்திற்கு எதிராக பொருளாதாரத்தை பாதுகாக்க உதவும் சிறந்த முதலீடாக இது உள்ளது. தங்கத்தை பொருத்தவரை கடந்த காலங்களில் சிறந்த பலன்களை வழங்கி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கள் விலை ரூ.1,00,000 எட்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த பலன்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.