ரெப்போ வட்டி விகித குறைப்பு எதிரொலி.. FD-களின் வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்!

RBI Repo Rate Cut Impact | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக பல வங்கிகள் தங்களில் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. அந்த வகையில் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களையும் சில வங்கிகள் குறைத்துள்ளன.

ரெப்போ வட்டி விகித குறைப்பு எதிரொலி.. FD-களின் வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Apr 2025 16:20 PM

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) சமீபத்தில் ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்து அறிவித்தது. இதன் எதிரொலியாக சில வங்கிகள் தங்களின் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மற்றொரு புறம் பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் மற்றொரு செய்தியும் உள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில் வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டத்தின் வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கியுள்ளன.

ரெப்போ வட்டி விகிதம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும்

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகளை குறைத்து அறிவித்தது. இதன் மூலம் 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது வெறும் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த வட்டி உயரும் பட்சத்தில் வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும் உயரும். இதுவே ரெப்போ வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும். நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கும் இது பொருந்தும். அதாவது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்போது எஃப்டி வட்டி விகிதம் உயரவும், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போது எஃப்டி வட்டி விகிதம் குறையவும் செய்யும்.

எஃப்டி வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளதால் சில வங்கிகள் எஃப்டி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. அதன்படி எந்த எந்த வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்டிஎஃசி வங்கி, யெஸ் பேங்க்

  • 2 ஆண்டுகள் 11 மாதங்களுக்கான திட்டம் – 35 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.
  • 4 ஆண்டுகள் 7 மாதங்களுக்கான திட்டம் – 40 அடிப்படை புள்ளிகள் குறைப்பு.

கனரா வங்கி, பிஎன்பி வங்கி

கனரா வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.

  • 444 நாட்களுக்கான திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு தற்போது 7.25  சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.
  • மிக மூத்த குடிமக்களுக்கு 80 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்த வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன்பாக ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.