இனி ATM-களில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் எளிதாக கிடைக்கும்.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
RBI Mandates 100 and 200 rupees Notes in ATMs | பெரும்பாலான மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுக்கின்றனர். ஆனால், ஏடிஎம்களில் 500 மற்றும் 2,000 நோட்டுக்கள் அதிகம் இருப்பதால் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆர்பிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) இந்தியாவின் நிதி சார்ந்த விவகாரங்களை கண்கானிப்பது, வங்கிகளுக்கு விதிமுறைகளை வழங்குவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தேவையற்ற ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்வது, புதிய ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்து என பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது பொதுமக்களுக்கு பயணளிக்கும் வகையில், வங்கிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விதையை 75 சதவீதம் பின்பற்றுவதை 2025, செப்டம்பர் மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆர்பிஐ வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம் சேவையை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் வழக்கத்தை பின்பற்றுவதில்லை. மாறாக அவர்கள் தேவை ஏற்படும் போது அதற்கான பணத்தை ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மூலம் எடுத்துக்கொள்கின்றனர். பொதுமக்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்க வேண்டு என்பதற்காக வங்கிகள் முக்கிய இடங்களில் ஏடிஎம் மையங்களை அமைத்து செயல்படுத்தி வருகின்றன.
ஏடிஎம் மையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றில் சில சிக்கல்களும் உள்ளன. அதாவது, பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் 500 ரூபாய், 2,000 ரூபாய் என பெரிய தொகைகளுக்கான ரூபாய் நோட்டுக்கள் தான் கிடைக்கின்றன. இதனால் சிறிய தேவைகளுக்காக பணம் எடுக்க விரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதனை சரிசெய்யும் வகையில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வங்கிகளுக்கு ஆர்பிஐ அளித்த உத்தரவு
சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் ஏடிஎம் மையங்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுக்களை வைக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும், 2025, செப்டம்பர் மாதத்திற்குள் 75 சதவீத ஏடிஎம்களில் குறைந்தபட்ச அளவிலான 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் 2026, மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஏடிஎம்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.