ரெப்போ ரேட் குறைப்பு – ஹோம் லோன் பெற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்?
Home Loan EMI to Drop: ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்துள்ள நிலையில் ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் இஎம்ஐ முறையை எவ்வாறு மாற்றியமைத்துக்கொண்டால் பலன் கிடைக்கும் என்பது குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வீடு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் பெரும் கனவு. வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார் என்பார்கள். அப்படி ஒரு வீடு என்பது திருமணம் போன்ற பல விஷயங்களை தீர்மானிக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு, சொந்த வீட்டைப் பெறுவது என்பது ஒரு பெரும் சாதனையாகவே இருக்கிறது. ஓய்வின்றி, முழு வாழ்நாள் முழுவதும் வேலை செய்து சேமித்து, கட்டப்படும் வீடு அவர் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும். அந்த சாதனைகளுக்கு பின்னால் போராட்டமே அதிகம். சொந்த வீட்டுக்காக ஹோம் லோன் (Home Loan) எடுப்பது இப்போது ஒரு வழக்கமாகிவிட்டாலும், அதன் பின்னால் நிறைய சிக்கல்கள் உள்ளன ஹோம் லோனுக்காக ஏகப்பட்ட விதிமுறைகளை விதிக்கின்றன. மேலும் அதிக வட்டி விகிதங்களால் (Interest Rate) நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியதாக இருக்கிறது.
இதையெல்லாம் கடந்து கடனைப் பெற முடிந்தாலும், அந்த கடனை 20-30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் கட்டாயத்தில் மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். வாடகை வீட்டில் இருக்கும் பிரச்னை, எப்போது வீட்டின் வாடகை உயரும் என்பது தெரியாது. வீட்டின் உரிமையாளரைக் கேட்காமல் நம் வசதிக்கு ஏற்ப சிறு மாற்றங்களை கூட செய்ய முடியாது. சொந்த வீடு என்பது ஒரு இடத்தின் உரிமை மட்டுமல்ல, அது ஒரு மனநிம்மதி, ஒரு அடையாளம்.
ஹோம் லோன் பெற்றுள்ளவர்களுக்கான நன்மைகள்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் இந்தியாவின் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தனது முக்கிய வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்து 6% ஆகக் கொண்டுவந்துள்ளது. இந்த முடிவு, ஹோம் லோன் வாங்கியவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும், ஏனெனில் இது வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது .
இஎம்ஐ செலுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ரெப்போ விகிதம் குறைவதால், வங்கிகள் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதமும் குறையும். இஎம்ஐ தொகையை முந்தைய நிலைமையில் வைத்துக்கொண்டு, கடன் காலத்தை குறைப்பதன் மூலம், மொத்த வட்டி செலவில் அதிக சேமிப்பு பெறலாம். புதிதாக வீட்டுக் கடன்கள் எடுக்க விரும்புவோருக்கு, குறைந்த வட்டி விகிதம் காரணமாக, கடன் பெறும் திறன் அதிகரிக்கும். இது, நடுத்தர வர்க்க மக்களுக்கு, குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில், வீட்டுக் கடன்கள் எடுக்க உதவியாக இருக்கும்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் வங்கிகள், வட்டி விகிதத்தை எப்போது குறைக்கும் என்பது, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கும். உங்கள் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளதா என்பதை சரிபார்த்து முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக குறைந்த வட்டி விகிதம் வழங்கும் வங்கிக்கு மாற்றம் செய்வதை பரிசீலிக்கவும். மேலும் புதிகாக வீட்டுக் கடன் பெற விரும்புபவர்களுக்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.