ரூ.20 லட்சம் வரை பிணை இல்லாமல் கடன் வழங்கும் அரசு.. தொழில் தொடங்க இதுதான் பெஸ்ட்!

Pradhan Mantri Mudra Yojana scheme | அரசு பொதுமக்களுக்கு பயனளிக்கும் பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இதன் மூலம் பொதுமக்கள் சுமார் ரூ.20 லட்சம் வரை பிணை இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.20 லட்சம் வரை பிணை இல்லாமல் கடன் வழங்கும் அரசு.. தொழில் தொடங்க இதுதான் பெஸ்ட்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Apr 2025 17:12 PM

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொருளாதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொருளாதாரம் இல்லை என்றால் நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே பொருளாதாரத்தை உருவாக்க பலரும் பல வகையான யுக்திகளை கையாள்வர். உலகில் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்லும் நபர்களாக தான் உள்ளனர். வேலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கையை விடவும் தொழில் செய்யும் நபர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக தான் இருக்கும். காரணம், தொழில் செய்ய வேண்டும் என்றால் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு இல்லாத காரணத்தால் தொழில் செய்ய விருப்பம் இருந்தும் பலர் வேலை செய்து வருகின்றனர்.

சாமானியர்களுக்கு தொழில் முனைவோர் ஆகும் வாய்ப்பு

இந்த நிலையில் தான் ஒரு அசத்தலான திட்டம் மூலம் அரசு பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. அதாவது தொழில் தொடங்க ஆர்வம்  உள்ள பொதுமக்களுக்கு சுமார் ரூ.20 லட்சம் வரை எந்த வித பிணையும் இல்லாமல் அரசு கடன் வழங்கி வருகிறது. அத்தகைய திட்டம் தான் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY – Pradhan Mantri Mudra Yojana) என்ற திட்டம். தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற நினைக்கும் சாமானியர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம்

சாமானிய மக்களும் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் தொழில் முனைவோருக்கு ரூபாய் பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முத்ரா கடன் தொகையை ரூபாய் 20 லட்சம் ஆக அரசு உயர்த்தியது. இதன் மூலம், பொதுமக்கள் தற்போது முத்ரா கடன் திட்டத்தில் ரூபாய் 20 லட்சம் வரை கடன் பெறலாம்.

இந்த முதரா கடன் திட்டத்தில் 4 பிரிவுகளின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிஷு, கிஷோர், தருண் மற்றும் தருண் பிளஸ் என்ற பெயர்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சிஷு பிரிவில் ரூ.50,000 வரை கடன் பெற அனுமதி வழங்கப்படுகிறது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இது தொழில் தொடங்க முதலீடு தேடும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தருண் திட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஒரு பெரிய தொழில் தொடங்க இது சிறந்ததாக இருக்கும்.

பொதுமக்கள் இந்த மூன்று திட்டங்களில் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தினார்கள் என்றால் அவர்களுக்கு தருண் பிளஸ் திட்டத்தில் கடன் வழங்கப்படும். அந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.