PPF : அதிக பலன்களை வழங்கும் அஞ்சலக பிபிஎஃப்.. ஒருவர் ஒரு கணக்கு மட்டும் தான் தொடங்க முடியுமா?
Can A Person Open More Than One PPF Account | அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் பிபிஎஃப் திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தொடங்கலாமா அவ்வாறு தொங்கினால் என்ன ஆகும் என்பது குறித்து பார்க்கலாம்.

பிபிஎஃப் (PPF – Public Provident Fund) திட்டம் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய விரும்பும் நபர்களுக்கு இது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டம் சிறந்த லாபத்தை மட்டுமன்றி வரி சலுகைகளையு (Tax Benefits) வழங்குகிறது. வருங்கால தேவைகளுக்கான முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் இதனை தேர்வு செய்யலாம். அதாவது, திருமணம், பணி ஓய்வு, பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்ததாக இருக்கும்.
பாதுகாப்பான வருமானத்தை வழங்கும் பொது வருங்கால வைப்புநிதி
எதிர்கால தேவைகளுக்காக முதலீடு செய்ய விரும்பும் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தை தான் தேர்வு செய்வர். இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படுவதால் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு அம்சங்கள் மற்றும் பயன்களை வழங்கக்கூடிய பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு கணக்கு தான் தொடங்க முடியுமா, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிபிஎஃப் திட்டத்தில் ஒரே ஒரு கணக்கு மட்டும் தான் தொடங்க முடியுமா?
பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் கணக்கை தொடங்குவது மற்றும் முதலீடு செய்வதற்கு சில விதிகள் உள்ளன. அதனை பின்பற்றி தான் அதில் முதலீடு செய்ய முடியும். அதன்படி, பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் விதிகளின் படி, உங்கள் பெயரில் ஒரே ஒரு கணக்கு தொடங்க மட்டும் தான் அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் பல வங்கிகள் அல்லது தபால் நிலையங்களுக்கு சென்று முயற்சித்தாலும், ஒருவரின் பெயரில் பல கணக்குகள் தொடங்க முடியாது. அதனையும் மீறி நீங்கள் பல பிபிஎஃப் கணக்குகள் தொடங்கினால் அது செல்லாத கணக்காக கருதப்படும்.
அவ்வாறு நீங்கள் உங்களது பெயரில் இரண்டாவது பிபிஎஃப் கணக்கு தொடங்குகிறீர்கள் என்றால், அதில் முதலீடு செய்யும் பணம் திரும்ப கிடைக்கும். ஆனால், அதற்கு முதல் பிபிஎஃப் கணக்கில் வழங்கப்படுவதை போல வட்டி வழங்கப்படாது. ஒருவேளை நீங்கள் உங்கள் பெயரில் ஒரு கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்களது குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு தொடங்கலாம். இப்படி செய்யும்போது அந்த கணக்கின் பாதுகாவலராக நீங்கள் இருப்பீர்கள்.
ஆனால், அவ்வாறு பாதுகாவளர் கணக்கில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். உதாரனமாக, நீங்கள் உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட கணக்கில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்கள் பிள்ளைகளின் பெயரில் நீங்கள் தொடங்கும் கணக்கில் ரூ.50,000 வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.