தபால் நிலைய சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.5500 நிலையான வருமானம்!

Post Office MIS 2025: தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் என்ற திட்டத்தில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால் மாதம் ரூ.5500 நிரந்தர வருமானம் பெறலாம். இந்த திட்டத்தில் இணைவது எப்படி?, தகுதிகள் என்ன? என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தபால் நிலைய சேமிப்பு திட்டம் - மாதம் ரூ.5500 நிலையான வருமானம்!

மாதிரி புகைப்படம்

Published: 

17 Apr 2025 17:36 PM

நாம் சம்பாதிக்கும் வருமானத்தில் இருந்து தேவையற்ற செலவுகளை தவிர்த்து, எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பது அவசியம். இது நம்மை பொருளாதார ரீதியாக பாதுகாக்கிறது. சேமிப்புகள் நம்மை எதிர்பாராத அவசர சூழ்நிலைகளில் நிதி இழப்பில் இருந்து காப்பாற்றும்.  ஆனால் நமது பணத்தை பாதுகாப்பாக எப்படி சேமிப்பது என்பது நம் முன்னே இருக்கும் கேள்வி. இந்த நிலையில் இந்திய தபால் துறையின் (Post Office) கீழ் இயங்கும் சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாகவும், சிறந்த வட்டி வழங்குபவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, மாத ஊதியதாரர்கள், குறைவான வருமானம் உள்ளவர்கள், கிராமப்புற மக்களுக்கு இது மிகுந்த நம்பிக்கையுடன் கூடிய சேமிப்பு வழியாக இருக்கிறது. இது அரசு அங்கீகாரம் பெற்றது என்பதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். வங்கிகளை (Bank) விட அதிக வட்டி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் சில திட்டங்களுக்கு நமக்கு வரி தள்ளுபடியும் கிடைக்கும். இந்தியாவில் (India) உள்ள கிராமங்கள் நகரங்கள் என பெரும்பாலான இடங்களில் இருப்பதால் இதனை எளிமையாக அணுக முடியும்.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS)  குறைந்த முதலீட்டில் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.  குறிப்பாக மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை விரும்புபவர்களுக்கு இது சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் நாம் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு உங்களுக்கு 7.4 சதவிகித வட்டி கிடைக்கும். அதன் படி ரூ.9 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு செலுத்தினால் மாதம் நமக்கு ரூ.5500 கிடைக்கும்.

இந்த திட்டம் பாதுகாப்பானதா?

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப, வட்டி ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இது முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குகிறது. மேலும் இது அரசு ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், உங்கள் முதலீடு மிகவும் பாதுகாப்பானது. உங்களது முதலீடு திரும்ப கிடைக்குமா என்ற பயம் இல்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு நாம் முதலீடு செய்த தொகையை திரும்ப பெறலாம் அல்லது மீண்டும் திட்டத்தை புதுப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் என்ன?

தபால் நிலையங்களில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டுத் தொகையை செலுத்துவதன் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம். ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு கணக்கை மாற்றும் வசதியும் உள்ளது. கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தைப் பெறுவதற்கு ஒரு நாமினியையும் நியமிக்கலாம்.

18 வயது நிரம்பிய எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர்கள் அல்லது பாதுகாவர்கள் மூலம் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் இணைய ஆதார் எண் பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை தபால் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.