உங்களுக்கு 40 வயதா? வேலை பறிபோகும் ஆபத்து -அதிர்ச்சி தகவல்

Secure Your Career Path: இந்தியாவில் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனர் சாந்தனு தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் வேலை இழப்பதில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக அவர் தெரிவித்திருக்கிறார்.

உங்களுக்கு 40 வயதா? வேலை பறிபோகும் ஆபத்து -அதிர்ச்சி தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

15 Apr 2025 17:56 PM

இந்தியாவில் (India) வேலை வாய்ப்பு சூழல் கடந்த சில ஆண்டுகளாகவே கவலை அளிக்கக் கூடிய மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திரமயமாக்கல் போன்றவைகள் வேகமாக வளர்ந்து வருவதால், பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்து வருகின்றன. புதிய திறன்களை பெறுவதில் குறைபாடு, தொழில்நுட்பங்களை புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல் காரணமாக பல பணியாளர்கள் வேலை இழக்கும் சூழலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, இளைய தலைமுறை பணியாளர்கள் அதிக திறனுடன் புதிய தொழில்நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்வதன் காரணமாக 40 வயதுக்கு மேல் உள்ள பணியாளர்களுக்கு வேலை நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக பிராடெக்ட் மேனேஜ்மென்ட்,UX டிசைன் ஆகிய துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.  கூகுளின் முக்கிய பகுதிகளான Voice Assistant, பிக்சல் போன் போன்ற டீம்களில் வேலை செய்த பல ஊழியர்கள் வேலை இழந்தனர். புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்பதும், வேலை திறனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அந்நிறுவனம் காரணம் தெரிவித்தது. ஆனால் இது, ஐடி துறையில் வேலை நிரந்தரமில்லை என்பதையும், எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதையும் நினைவூட்டுகிறது.

பாம்பே சேவிங் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே கூறும் வகையில், தற்போது 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களே அதிகம் பணி இழப்புக்கு உள்ளாகிறார்கள். அதிக அனுபவம், திறமைகள் உள்ள இந்த வயதில் கூட, பெரிய சம்பளம் வாங்கும் காரணத்தால் நிறுவனங்கள் இந்த வயதினரையே முதலில் குறிவைக்கின்றன. பொதுவாக 40 வயது என்பது பொருளாதார ரீதியாகவும், மனநல ரீதியாகவும் மிகவும் அழுத்தமான காலம். வீட்டு கடன், குழந்தைகளின் கல்வி, பெற்றோரின் மருத்துவ செலவுகள் ஆகியவை அதிகமாக இருக்கும் காலம். அப்போது சேமிப்புக்கு துளியும் வழி இருக்காது. இந்நிலையில் வேலை இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நிறுவனங்கள் ஏன் அனுபவமுள்ளவர்களை பணி நீக்கம் செய்கின்றன?

இப்போது நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்கள் தெரிந்த இளைஞர்கள் அதிகம் வேலைக்கு வருவதால் அதிக சம்பளம் வாங்கும் நடுத்தர வயதினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய இளைஞர்களை கொண்டே அவர்கள் செய்யும் வேலையை செய்ய முடியும் என்பதால் அவர்களுக்கு ஏன் கூடுதல் சம்பளம் தர வேண்டும் என நிறுவனங்கள் யோசிக்கின்றன. தொழில்நுட்பம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் முயற்சியில், அனுபவமுள்ள நடுத்தர வயதினர் கூட பணி இழப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலைமையில், குறிப்பாக 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், தங்களை பாதுகாக்கவும், தொழில்துறையில் நிலைத்திருக்கவும் சில முக்கியமான மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

பணிநீக்கம் தவிர்க்க 40-க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய 3 முக்கிய வழிகள்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் திறன் எல்லா துறைகளிலும் தேவை. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது, உங்கள் வேலை பாதுகாப்புக்கான முக்கிய ஆயுதமாகும்.

வீடு, கல்வி, மருத்துவம் என அதிக செலவுகள் இருக்கும் இந்த வயதில் நிதி சேமிப்பு கட்டாயம். செலவுகளை கட்டுப்படுத்தி, அவசர காலத்திற்கு பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரே வேலையை பார்க்காமல் உங்களிடம் இருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி, ஃப்ரீலான்ஸ், கன்சல்டிங் போன்ற வாய்ப்புகள் மூலம் தனிப்பட்ட வருமானம் உருவாக்குவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.