புதிதாக திருமணமானவரா? பணத்தை ஒன்றாக நிர்வகிக்க 10 எளிய குறிப்புகள்
Financial Tips for Newlyweds: கணவன் - மனைவி ஆகிய இருவரிடையே அடிக்கடி எழும் பிரச்னைகளில் முக்கியமானது நிதி நிர்வாகம். பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து இருவருக்கும் வித்தியாசமான எண்ணங்கள் இருக்கும். இந்த நிலையில் திருமணமானவர்கள் தங்கள் பணத்தை நிர்வகிப்பது தொடர்பான எளிய வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

திருமணத்திற்கு (Marriage) பிறகு கணவன், மனைவி இருவரும் பொருளாதார நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிடுவது அவசியம். இருவரது வருமானம், செலவுகள் ஆகியவை குறித்து உரையாடலை தொடங்க வேண்டும். ஒருங்கிணைந்த பொருளாதார இலக்குகளை நிர்ணயித்து அதற்கு ஏற்ப செயல்படுவது அவசியம். காப்பீடு (Insurance), முதலீடுகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். பெரிய பொருளாதார முடிவுகளை எடுக்கும் போது இருவரும் இணைந்து முடிவெடுப்பது நல்லது. செலவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் அவசர தேவைகளுக்காக சேமிப்பது (Savings) அவசியம். இது இருவரது உறவையும் மேம்படுத்தும். என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
செலவுகள் தொடர்பான உரையாடலை தொடங்குங்கள்
திருமண பந்தத்தில் இணையும்போது பல தேவைகளுக்கு செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே முதலிலேயே இருவரும் திறந்த மனதுடன் பேச வேண்டும். உங்கள் வருமானம், கடன்கள், சேமிப்புகள், செலவுகள் ஆகியவை பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் எதிர்காலத்தில் பிரச்னைகள் ஏற்படாது. உறவும் மேம்படும்.
கூட்டுக் கணக்குகளை உருவாக்குங்கள்
கணவன் – மனைவி இருவரும் ஒரே வங்கியில் கூட்டு கணக்கு (Joint Account) தொடங்கி சேமிக்க வேண்டும். இது இருவருக்கும் செலவுகள் குறித்து புரிதலை ஏற்படுத்தும்.
மாதாந்திர பட்ஜெட் அமைக்கவும்
ஒவ்வொரு மாதமும் செலவுகளை திட்டமிடுங்கள். வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்ஜெட்டை போட்டுக்கொள்ளுங்கள்.
சேமிப்பு இலக்குகளை சேர்ந்து நிர்ணயிக்கவும்
வீடு வாங்குவது, வெளிநாட்டு சுற்றுலா, குழந்தைகளின் எதிர்காலம் என உங்கள் கூட்டுச் சேமிப்பு இலக்குகளை தீர்மானிக்கவும். இருவரும் அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் பணத்தை ஒதுக்க வேண்டும்.
அவசர நிதியை உருவாக்குங்கள்
திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகள், வேலை இழப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு இருவரும் சேர்ந்து ஒரு அவசர நிதியை (Emergency Fund) உருவாக்க தொடங்குங்கள். இது பாதுகாப்பு உணர்வை வழங்கும்.
கடன்களை பராமரிக்கவும்
ஒவ்வொருவரின் கடன்கள் குறித்து பேசுங்கள். தேவையானபோது சேர்ந்து திட்டமிட்டு அடைத்திடுங்கள். அதிக வட்டியுடன் கூடிய கடன்களை முதலில் முடிப்பது நல்லது.
ஓய்வுக்கால திட்டங்களை ஆரம்பிக்கவும்
இளம் வயதிலேயே ஓய்வுக்கால சேமிப்பை ஆரம்பித்துவிடுங்கள். சிறிய தொகையிலிருந்தே தொடங்கினாலும் பரவாயில்லை. எதிர் காலத்தில் அது பெரிய தொகையாக மாறி நமக்கு கைகொடுக்கும்.
பணம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை சேர்ந்து எடுக்கவும்
புதிய முதலீடுகள், வீடு, வாகனம் போன்ற முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் இருவரும் கலந்தாலோசிக்க வேண்டும். தன்னிச்சையாக ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவுகள் நம்பிக்கையைக் குறைக்கும்.
தனிப்பட்ட செலவுகள் குறித்து திட்டமிட வேண்டும்
ஷாப்பிங் போன்ற தனிப்பட்ட தேவைகளுக்காக செய்யும் செலவுகளுக்கு சிறிய தொகை ஒதுக்கவும். இது நிதி சுதந்திரத்தையும் உறுதி செய்யும்.
நிதி நிர்வாகத்தில் உள்ள வித்தியாசங்களை மதிக்கவும்
இருவரும் பணத்தை செலவு செய்யும் பாணிகள் வேறுபடும். ஒருவருக்கு சேமிப்புப் பழக்கம் அதிகமாயிருக்கும். மற்றொருவர் அதிகம் செலவு செய்ய விரும்புவர். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது விருப்பங்களை மதித்து அதற்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)