LIC-ல் உரிமை கோரப்படாத ரூ.3,726 கோடி – உங்க பணம் இருக்கா? தெரிந்துகொள்வது எப்படி
LIC Unclaimed Amount: எல்ஐசி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷனில் உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.3726 கோடியில் நமது பணம் இருக்கிறதா எப்படி தெரிந்து கொள்வது மற்றும் அப்படி இருந்தால் அந்த பணத்தை எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
எல்ஐசி எனப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேசன் (Life Insurance Corporation), இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக திகழ்கிறது. சேமிப்பு, வருங்கால முதலீடு ஆகியவற்றுக்கு சிறப்பான, பாதுகாப்பான திட்டங்களை எல்ஐசி வழங்குகிறது. டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance), மணி பேக் பாலிசி, ஹோல் லைஃப் பாலிசி, ஓய்வு காலத்திற்கு வருமானத்தை உறுதி செய்யும் திட்டமான பென்சன் பிளான்ஸ் மற்றும் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கான சில்ரன்ஸ் பிளான்ஸ் ஆகியவை இதன் முக்கிய பாலிசிகளாக பார்க்கப்படுகின்றன. மேலும் வரித் தள்ளுபடி, ரிஸ்க் கவர், பாலிசியை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறும் திட்டம், நாமினியைத் தேர்ந்தெடுக்கும் திட்டம் என பல நன்மைகள் இதில் இருக்கின்றன. கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இது பாதுகாப்பானது என மக்கள் கருதுகின்றனர்.
இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்து பலருக்கும் அவ்வளவாக புரிதல் இருக்காது. குறிப்பாக பாலிசி முடிகிற காலத்தில் அதனை யாரும் எடுக்க மாட்டார்கள். இதுவரை எல்ஐசியில் யாரும் உரிமை கோராமல் ரூ. 3,726 கோடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் நம்மில் பெரும்பாலானோரின் பணம் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதனை தெரிந்துகொள்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எல்ஐசியில் கோரப்படாத ரூ.3726 கோடி – பின்னணி என்ன?
ஒரு குடும்பத் தலைவர் எல்ஐசி பாலிசி வைத்திருக்கிறார் என்றால் அவரது குடும்பத்தினர் யாரையாவது நாமினியாக நியமித்திருப்பார். ஆனால் அவர் குடும்பத்தினருக்கு அது குறித்து புரிதல் இருக்க வேண்டும். ஒருவேளை எதிர்பாராதவிதமாக குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் சில நேரங்களில் அவரது இன்சூரன்ஸ் பாலிசிக்கு யாரும் உரிமை கோராமல் விட்டுவிடுகின்றனர். காரணம் அவர்கள் மறந்துவிட்டிருக்கலாம் அல்லது அது குறித்து தெரியாமல் இருக்கலாம். அப்படி எல்ஐசியில் உரிமை கோராமல் ரூ. 3726 கோடி பணம் இருக்கின்றன.
எப்படி தெரிந்துகொள்வது?
இதனை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம். எல்ஐசி வெப்சைட் சென்று கஸ்டமர் சர்வீஸ் என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் Unclaimed Amount of Policyholder என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து பாலிசி நம்பர், பாலிசி ஓனரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு, சப்மிட் கொடுத்தால், நமது கணக்கில் தொகை இருந்தால் நமக்கு உடனடியாக தெரிந்துவிடும். ஒருவேளை பாலிசி நம்பர் நமக்கு தெரியவில்லை என்றால் பாலிசி ஓனரின் பெயர் மற்றும் பிறந்த தேதி மட்டும் கொடுத்தால் நமது கணக்கில் உரிமை கோரப்படாத தொகை இருக்கிறதா என்பது தெரிந்துவிடும்.
நமது குடும்பத்தினரின் நன்மைக்காக எல்ஐசி பாலிசி எடுக்கிறோம். ஆனால் யாரை நாமினியாக தேர்ந்தெடுக்கிறோம், தொகையை எப்படி பெறுவது போன்ற மிக முக்கிய தகவல்களை நமது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வது அவசியம்.