கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? செலவுகளை கட்டுப்படுத்த 5 டிப்ஸ்!
Credit Card Smart Use : கிரெடிட் கார்டுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் பலரும் அதனை அடிக்கடி பயன்படுத்தி பெரிய கடன் சுமைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் அதனை தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டை (Credit Card) சரியாக பயன்படுத்தினால் அது பல வழிகளில் நன்மை பயக்கும். நமக்கு நிதி நெருக்கடியான காலகட்டங்களில் கிரெடிட் கார்டு கைகொடுக்கும். கிரெடிட் கார்டுகள் மூலம் கிடைக்கும் ரிவார்டு பாயிண்ட்கள், கேஷ்பேக் போன்றவற்றை சரியாக பயன்படுத்துவன் மூலம் நம்மால் பணத்தை சேமிக்க முடியும். கிரெடிட் கார்டு பில்களை சரியான முறையில் செலுத்தி வந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும். இது எதிர்காலத்தில் நாம் கடன்களை பெற உதவியாக இருக்கும். ஆனால் நம்மில் பலர் கிரெடிட் கார்டுகளை தினமும் சிறுசிறு விஷயங்களுக்காகப் பயன்படுத்தி, நம்மை அறியாமல் பெரிய கடன்களில் சிக்கிக்கொள்கிறோம். சிறிய பழக்கவழக்கங்களை மாற்றினாலே இந்த நிலைமையை தவிர்க்கலாம். இதோ உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளை கட்டுப்படுத்த 5 முக்கியமான விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
வீட்டின் மாத பட்ஜெட்டை உருவாக்கவும்
முதலில் உங்கள் மாத வருமானத்தையும், அவசியமான செலவுகளையும் எழுதி எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்ஜெட்டை உருவாக்குங்கள். பிறகு, பட்ஜெட்டிற்கு உட்பட்ட செலவுகளை மட்டுமே செய்யுங்கள். இப்படி செய்தால், கிரெடிட் கார்டை அவசியம் இல்லாமல் ஸ்வைப் செய்வது குறையும்.
கிரெடிட் கார்டை வீட்டிலேயே வைக்கவும்
நமக்கு பொதுவாக தேவை இருக்கிறதோ இல்லையோ எப்பொழுதும் எதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த நேரங்களில் கிரெடிட் கார்டு நம் கையில் இருந்தால் அடிக்கடி ஸ்வைப் செய்ய வேண்டி வரும். அதனை தவிர்க்க, கிரெடிட் கார்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வெளியே செல்லாதீர்கள். மிக அவசியம் என்றால் மட்டுமே எடுத்துச் செல்லுங்கள்.
அவசியமான செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தவும்
வீட்டுக்கு தேவையான விஷயங்கள் போக, மருத்துவம், கல்வி போன்ற அவசர தேவைகளின் மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தவும். இது நிதி ஒழுங்கை கடைபிடிக்க உதவும்.
ஆன்லைனில் Auto Save/Auto Pay செய்வதை நிறுத்துங்கள்
பல வலைத்தளங்கள் அல்லது ஆப்களில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை சேமித்து வைத்திருப்பதால், ஒரு கிளிக்கில் பயன்படுத்திவிட முடிகிறது. இந்த auto-save வசதியை நீக்குங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் தேவையை முடிவு செய்து அதற்கு ஏற்ப பயன்படுத்துங்கள்.
மாதத்துக்கு ஒருமுறை கிரெடிட் கார்டு விவரங்களை கண்காணிக்கவும்
ஒவ்வொரு மாதமும் கடன் அட்டையில் எவ்வளவு செலவாகிறது என்பதை சரிபாருங்கள். அதிகம் செலவாகியிருந்தால், அதற்கு காரணம் என்ன என்பதை புரிந்துகொண்டு அடுத்த மாதம் அதனை முடிந்த வரை தவிர்க்கவும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)